Server என்றால் என்ன?



”சர்வர் Bபிஸி”, ”சர்வர் Dடவுனாச்சு”,  ”சர்வர் Fஃபெயிலாச்சு”,  என  சர்வர் பற்றிய பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் கேட்டிருக்கலாம்.  என்ன இந்த சேர்வர்?

சர்வர்  (Server) என்பது ஒரு கணினி வலையமைப்பில்  பிற  கணினிகளுக்குத் தரவுகளை வழங்கும்  மற்றுமொரு  கணினியைக் குறிக்கிறது. .  அக்கணினி வலையமைப்பபானது  குறுகிய எல்லையைக் கொண்ட ஒரு இடத்துரி வலையமைப்பாகவோ (local area network - LAN) அல்லது  இணையம் போன்ற பரந்த வலையமைப்பாகவோ (wide area network - WAN)  இருக்கலாம்.

சர்வர் கணினிகளில் வலை சேவையகங்கள் (web servers)  மின்னஞ்சல் சேவையகங்கள் (mail servers ) கோப்பு சேவையகங்கள் (file servers)  உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.  ஒவ்வொரு வகை சேவையகத்தின் நோக்கத்திற்காக  குறிப்பிட்ட வகையான  மென்பொருள்கள்  அச்சேவையகங்களில் இயங்குகின்றன.. உதாரணமாக, ஒரு இணைய சேவையகம் அப்பாச்சி  Appachi  HTTP  Server  அல்லது மைக்ரோசாப்ட் IIS  சேவையக மென்பொருளை கொண்டிருக்கும். இவை இரண்டும் இணையத்தில் வலைத்தளங்களை அணுகுவதற்கு உதவுகின்றன.

அதே போன்று ஒரு மின்னஞ்சல் சேவையகம் Exim அல்லது iMail போன்ற ஒரு மென்பொருளைக்  கொண்டிருக்கும். அதன் மூலம்  மின்னஞ்சலை அனுப்பவும்  பெறவும் முடியுமாகிறது.

கோப்பு சேவையகங்கள்  வலையமைப்பில்  கோப்புகளை பகிர்ந்து கொள்ள சாம்பா Samba  அல்லது இயக்க முறைமையில் (Operating system) உள்ளமைக்கப்பட்ட கோப்பு பகிர்தல் மென்பொருள்களைப்  பயன்படுத்துகின்றன.

ஒவ்வொரு வகையான சேவையகமும் அதில் இயங்கும் மென்பொருளுக்கேற்ப வேறுபடுவதால் சேவையக வன்பொருள்  (hardware) அன்றி இங்கு மென்பொருளே முக்கியத்துவம் பெறுகிறது,

ஒரு சாதாரண டெஸ்க்டாப்  கணினியையும் உரிய  மென்பொருளை நிறுவுவதன் மூலம் ஒரு  சர்வர் கணினியாக மாற்றிவிட முடியும்உதாரணமாக,  ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை மற்றும் சாதனங்களை இணைத்து உருவாக்கப்பட்ட உங்கள் வீட்டு கணினி வலயமைப்பில் (home network) ஒரு கணினியை உரிய மென்பொருளை நிறுவுவதன் மூலம் கணினி கோப்பு சேவையகமாகவோ, அச்சு சேவையகமாகவோ அல்லது  இரண்டும். இணைந்த சேவையகமாகவ மாற்றிவிட முடியும்.

எந்த வகையான கணினி யையும் சேவையகமாக கட்டமைக்கப்பட முடியும் என்றாலும் மிகப்பெரிய நிறுவனங்கள் சேவையக செயல்பாடுகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட   வன்பொருள் சாதனங்களை அல்லது கணினிகளைப்  பயன் படுத்துகின்றன.

சேவையகக் கணினிகள் அளவில் சிறியதாகவும்,  அதிக எண்ணிக்கையிலான வன் தட்டுக்களைப் பொருத்தக் கூடியதாகவும், அது செயற்படு நிலையை அறிந்து கொள்வதற்காக பல்வேறு நிரங்களில் எல்.ஈ.டி விளக்குகளைக் கொண்டதாகவும்  தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவை உலோகச் சட்டங்களில் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைக்கப் படக் கூடியதாகவும் இருக்கும்.

பல்வேறு வகையான கணினிகளை சேவையகங்களாக  இயங்க  வைக்க முடியுமாக இருந்தாலும்   ​​சேவையகமொன்றிற்கு அவசியமான  வன்பொருள்  தேவைகளைத் திருப்தி செய்யக் கூடியதாக அவை இருத்தல் வேண்டும்.  உதாரணமாக, நிகழ்நேரத்தில் அதிகமான  வலை ஸ்கிரிப்ட் நிரல்களை  (web scripts ) இயக்கும்  ஒரு வலை சேவையகம் (web server) உயர்  வேகத்திலான நுன்செயலியையும்  (processor)  மற்றும்  போதியளவு நினைவகத்தையும் (memory) கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறிருந்தால் மாத்திரமே சேவையகம் இடையில் வேகம் குறைந்து முடங்கி விடாமல் தொடர்ச்சியாக அதனை இயங்க வைக்க மூடியும். அதே போன்று கோப்பு சேவையகங்கள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வன் தட்டுக்களை அல்லது SSD  ட்ரைவ்களைக் கொண்டிருக்க வேண்டும்,  இதன் காரணமாக வலை சேவையகங்களுக்கு விரைவாக தரவுகளை எழுதக் கூடியதாகவும்    படிக்கக் கூடியதாகவும்  (read & write) இருக்கும்.

சேவையகங்கள் கணினித்திரை மற்றும் உள்ளீட்டுச் சாதனங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. அதாவது பல சேவையகக் கணினிகளுக்கு ஒரேயொரு கணினித்திரை, விசைப்பலகை, மற்றும்  சுட்டி இருந்தால் போதுமானது.   பொதுவாக சேவையகங்கள் தொலைவிலிருந்தே அணுகப்படுகின்றன. அதனால் தரவு உள்ளீட்டுச் சாதனங்கள் முக்கியமான தேவையாகக் கருதப்படுவதில்லை.