Why do you need to partition a hard disk?


ஹாட் டிஸ்கை ஏன் Partition செய்ய வேண்டும்?

ஹாட் டிஸ்க் ஒன்றைக் கணினியில் பொருத்தியதும் அதனை போமட் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கு முன்னர் (Partition) பாட்டிசன் செய்து கொள்ள வேண்டும். என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒரு ஹாட் டிஸ்கின் மொத்த சேமிப்பிடத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொள்வதையே பாட்டிசன் எனப்படுகிறது. பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அதனை போமட் (format) செய்து பயன் படுத்த ஆரம்பிக்கலாம். 

பாட்டிசனை உருவாக்கும்போது ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரு பாட்டிசனுக்காக ஒதுக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு
80 GB கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் டிஸ்கை 80 GB கொண்ட ஒரே பாட்டிசனாகவும் பயன் படுத்தலாம். அல்லது அதனை இரண்டு, மூன்று அல்லது நான்கு பாட்டிசனாகவும் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் அதிக கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கை ஒரே பாட்டிசனாக பயன்படுத்துவது அரிது. இதே 80 GB ஹாட் டிஸ்கை இரண்டு பாட்டிசனாகப் பிரிக்கும்போது இயங்கு தளம் மற்றும் அப்லிகேசன் மென்பொருள்களை சேமிப்பதற்கு 20 GB யில் ஒரு பாட்டிசனும் ஏனைய பைல்களைச் சேமிப்பதற்கு 60 GB யில் ஒரு பாட்டிசனும் உருவாக்கிக் கொள்ளலாம்.


ஒரு பாட்டிசனை உருவாக்குவதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட பாடிசன்களை ஏன் உருவாக்க வேண்டும் என நீங்கள் வினவலாம். ஒரு ஹாட் டிஸ்கைப் பாட்டிசன் செய்வதன் மூலம் பல அனுகூலங்கள் கிடைக்கப் பெறுகின்றன.


·
ஹாட் டிஸ்கின் கொள்ளளவு அதிகமாயிருக்கும் பட்சத்தில் சில இயங்கு தளங்கள் அதனை ஆதரிக்காது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹாட் டிஸ்கைப் பல பகுதிகளாகப் பிரித்தே பயன்படுத்த வேண்டியிருக்கும். ஹாட்டிஸ்கின் கொள்ளளவிற்கேற்ப அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் விண்டோஸ் மற்றும் மென்பொருள்களை ஒரு பாட்டிசனிலும் டேட்டாவை ஏனைய பாட்டிசனிலும் சேமித்துக் கொள்ளும் வழக்கம் நடை முறையிலுள்ளது. அதன் மூலம் விண்டோஸில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது இயங்கு தளம் நிறுவப்பட்டிருக்கும் பாட்டிசனை மாத்திரம் போமட் செய்து விட்டு மறுபடியும் விண்டோஸை நிறுவிக் கொள்ளக் கூடிய வசதி கிடைக்கிறது. இதன் காரணமாக் ஏனைய பைல்களை இழக்க நேரிடாது.

சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இயங்கு தளங்களில் ஒரு பாட்டிசனின் உச்ச அளவு வரையறுக்கப்பட்டிருந்தது. எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கில் அந்த இயங்கு தளம் ஆதரிக்கும் உச்ச அளவிலான பாட்டிசனை உருவாக்கி விட்டு பயன் படுத்தப்படாத இடத்தில் மேலும் சில பாட்டிசன்கள உருவாக்க வேண்டியிருந்தது.

சில வேளை ஒரு இயங்கு தளம் பயன் படுத்தும் பைல் முறைமையை (file system), மற்றுமொரு இயங்கு தளம் ஆதரிக்காது விடலாம். எனவே வெவ்வேறு பைல் சிஸ்டம்களை ஆதரிக்கும் இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முற்படும்போது வெவ்வேறு பாட்டிசன்களை உருவாக்க வேண்டும்.

ஒரு பைல் சிஸ்டம் ஒரு பாட்டிசனில் டேட்டாவை சேமிக்கும்போது பாட்டிசனின் அளவு அதிகமாயிருக்கும்போது ஹாட் டிஸ்கில் காளியிடம் பயன் படுத்தப்படாது விரயமாவதற்கான வாய்ப்புள்ளது. சிறிய அளவிலானா ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டிசன்களை உருவாக்கும்போது பைல் சிஸ்டம் மூலம் உருவாக்கப்படும் விரயத்தைக் குறைக்கலாம். அதாவது சிறிய பாட்டிசன்கள் சிறிய க்லஸ்டர்களை உருவாக்கும். ஒரு க்லஸ்டர் என்பது ஒரு பாட்டிசனில் சேமிக்கக் கூடிய டேட்டாவின் மிகவும் சிறிய பகுதியாகும். பெரிய பாட்டிசன் 16 KB அளவிலான கலஸ்டரைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு எழுத்தைக் (character) கொண்ட ஒரு பைலை சேமிக்க 16 KB அளவு இடத்தை எடுத்துக் கொள்ளும். சிறிய பாட்டிசன்களில் அதே பைல் 4 KB அளவு இடத்தையே பிடிக்கும்.

ஹாட் டிஸ்கில் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைப்பதற்கான கட்டளை (MBR) Master Boot Record எனும் விவரங்கள் ஹாட் டிஸ்கின் ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த MBR இல் ஒரு (Partition Table) பாட்டிசன் அட்டவணையிருக்கும். அந்த பாட்டிசன் அட்டவணை ஹாட் டிஸ்க் பாட்டிசன் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். இந்த பாட்டிசன் அட்டவணை மேலும் நான்கு பாட்டிசன் அட்டவணைகளைக் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு அட்டவனையும் ஒவ்வொரு பாட்டிசன் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக ஒரு ஹாட் டிஸ்கில் நான்கு பாட்டிசன்களை உருவாக்க முடிகிறது. இதனை primary partitions எனப்படுகிறது. இந்த வரையரையின் காரணமாகவே extended partition எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு primary partition இல் ஒரு பாட்டிசனை extended partition பாட்டிசனாக மாற்றுவதன் மூலம் அதனுள்ளே மேலும் 24 பாட்டிசன்களை உருவாக்கலாம். இதனை logical partitions எனப்படுகிறது.

ஒவ்வொரு ஹாட் டிஸ்கிலும் அதனுள் உருவாக்கக் கூடிய நான்கு ப்ரைமரி பாட்டிசன்களில் ஒன்றை active partition ஆக செயற்படத்தக்க நிலைக்கு மாற்ற வேண்டும். அந்த எக்டிவ் பாட்டிசனையே, MBR இயங்கு தளத்தை ஆரம்பிப்பதற்குப் பயன் படுத்துகிறது. ஒரு பாட்டிசனை மாத்திரம் எக்டிவ் பாட்டிசனாக மர்ற்றும் போது ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை வெவ்வேறு பாட்டிசனில் நிறுவும் போது அவற்றை எவ்வாறு ஆரம்பிப்பது எனும் கேள்வி எழலாம். பூட் லோடர் ப்ரோக்ரமை (Boot loader) இந்த எக்டிவ் பாட்டிசனில் நிறுவுவதன் மூலம் இதற்குத் தீர்வு கிடைகிறது. கணினி இயங்க ஆரம்பிக்கும்போது MBR ஐ வாசித்தறிந்து எக்டிவ் பாட்டிசனைக் கண்டு கொள்கிறது. இங்கு பூட் லோடர் ப்ரோக்ரம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டிசனிலிருந்து இயங்கு தள்ம் ஆரம்பிக்குபோது போது பூட் லொடர் ப்ரோக்ரம் இயங்க ஆரம்பித்து எந்த இயங்கு தளத்தை ஆரம்பிப்பது என வினவுகிறது.

அனேக இயங்கு தளங்கள் ஹாட் டிஸ்கைப் பாட்டிசன் செய்ய fdisk எனும் கட்டளையைப் பயன் படுத்துகின்றன. அதே வேளை சில இயங்கு தளங்கள் பாட்டிசன் செய்வதற்கான வேறு கருவிகளையும் கொண்டுள்ளன.

-அனூப்-