What is Task Manager ?

என்ன செய்யும் இந்த Task Manager ?

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கணினிகளில் எம்.எஸ்.டொஸ் எனும் கமாண்ட் லைன் இண்டர்பேஸ் (Command Line Interface) கொண்ட இயங்கு தளமே பாவனையிலிருந்தது. அப்போது கணினியில் ஒரு நேரத்தில் ஒரு எப்லிகேசனை மட்டுமே செயற்படுத்த முடிந்தது.. எனினும் விண்டோஸ் போன்ற இயங்கு தளங்களின் வருகையின் பின்னர் கணினியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களை இயக்கிப் பணியாற்ற முடிகிறது. மல்டி டாஸ்கிங் (multi tasking) எனப்படும். இந்த வசதி தற்போதைய இயங்கு தள்ங்களின் ஒரு சிறப்பம்சம் எனலாம்.

ஒரே நேரத்தில் கணினியில் இயங்கும் அத்தனை எப்லிகேசன்களையும் நிர்வகிப்பதற்கென விண்டோஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் யூட்டிலிடியே விண்டோஸ் டாஸ்க் மேனேஜர். செயற்பட மறுக்கும் ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுத்துதல், .ப்ரொஸெஸ்ஸர் மற்றும் நினைவகம் என்பவற்றின் பயன்பாட்டை அறிந்து கொள்ளல், . புதிதாக ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளல் போன்ற பல செயற்பாடுகளை டாஸ்க் மேனேஜர் மூலம் நிர்வகிக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் டாஸ்க் மேனேஜரை கீபோர்டில் Ctrl + Alt + Delete அல்லது Ctrl+Shift+Esc விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து கொள்ளலாம். அல்லது ரன் கமாண்டாக taskmg டைப் செய்தும் திறக்கலாம். டாஸ்க் பாரில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்தும் இயக்கலாம். எனினும் விஸ்டா பதிப்பில் Ctrl + Alt + Del அழுத்தும் போது ஒரு மெனு தோன்றும் . அதிலிருந்து டாஸ்க் மேனேஜரைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். விஸ்டாவில் டாஸ்க் மேனேஜரை நேடியாக வரவழைக்க Ctrl+Shift+Esc கீகளை ஒரே முறையில் அழுத்த வேண்டும்.

ஒரு எப்லிகேசனில் பணியாற்றும் போது சில வேளைகளில் திடீரென கணினியில் மவுஸ் இயக்கம் அற்றுப் போய் கணினி உறைந்து விடுவதை ஒவ்வொரு கணினிப் பயனரும் அறிந்திருப்பர். அவ்வாறே சில வேளைகளில் டெஸ்க்டொப் தோன்றாது விடும். ஒரு ப்ரோக்ரமை இயக்க முடியாமல் போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கை கொடுக்கிறது டாஸ்க் மேனேஜர்.
டாஸ்க் மேனேஜர் டயலொக் பொக்ஸில் Application, Processes, Performance, Networking, Users என ஐந்து டேப் இருப்பதைக் காணலாம். செயற்பட மறுக்கும் ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுத்துவதற்கு டாஸ்க் மேனேஜரை திறந்து Application டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் எப்லிகேசன்களையும் அவற்றின் தற்போதைய நிலைகளையும் காண்பிக்கும்,. செயற்பட மறுக்கும் எப்லிகேசனினின் பெயருக்கு எதிரே Not responding என இருக்கும். அதனைத் தெரிவு செய்து அந்த டயலொக் பொக்ஸின் கீழே End Task பட்டனில் க்ளிக் செய்து அதனை நிறுத்தலாம்.

மேற் சொன்ன முறையில் உங்களால் ஒரு எப்லிகேசனை நீறுத்த முடியாது போனால் Processes டேப் மூலம் அதனை நிறுத்தலாம். Processes டேப் உங்கள் கணினியில் தற்போது எததனை .exe பைல்கள் இயக்கத்திலுள்ளன என்பதைக் காண்பிப்பதோடு அவற்றிற்கு எவ்வளவு ப்ரோஸெஸ்ஸர் மறும் நினைவகம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காண்பிக்கும். இங்கு பிரச்சினை தரும் எப்லிகேசனுக்குரிய .exe பைலைத் தெரிவு செய்து End Process பட்டனில் க்ளிக் செய்து நிறுத்தி விடலாம்.

Performance டேபில் க்ளிக் செய்ய கணினி ப்ரோஸெஸ்ஸர் மற்றும் நினைவகத்தின் பயன்பாட்டை ஒரு வரிப்படம் மூலம் காண்பிக்கிறது. இதன் மூலம் கணினி மெதுவாக இயங்கும் சந்தர்ப்பங்களில் நினைவகம் அதிகம் பயன்பாட்டிலுள்ளதா, ப்ரோஸெஸ்ஸர் நூறு வீதம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டுள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக ஒரு எப்லிகேசனை திறந்து கொள்ள டாஸ்க் மேனேஜரில் பைல் மெனுவில் New Task தெரிவு செய்ய வேண்டும்.. இது ரன் கமாண்டுக்கு நிகரானது.

இவை தவிர Networking டேபில் க்ளிக் செய்து உங்கள் கணினி ஒரு வலையமைப்பில் இணந்திருப்பின் அதன் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம். அதேபோல் Users டேபில் க்ளிக் செய்து வலையமைப்பில் இணைந்திருக்கும் ஏனைய பயனர்களையும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடிவதோடு அவர்களுக்குச் செய்திகளை அனுப்பவும் முடியும்.

- அனூப் -