What is Resolution -1 ?

Resolution என்றால் என்ன-1 ?

ஒரு டிஜிட்டல் கேமராவிலிருந்து படம் எடுக்குறீர்க்ள். கணினி திரையில் சிறிய அளவில் தெளிவாகத் தெரியும் அதனைப் பிறகு 8 x 10 அங்குள அளவில் பெரிதாகப் ப்ரிண்ட் செய்து பார்க்கும்போது அந்த போட்டோ தெளிவற்றுக் காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன?

கேமராவில் எடுக்கும் புகைப்படங்களா யிருக்கட்டும், கணினித் திரையில் தோன்றும் காட்சிகளாயிருக்கட்டும் இவற்றின் தெளிவுத் திறனில் பிக்ஸல்களே (Pixels) முக்கிய பங்கு வகிக்கின்றன. திரையில் படங்களும் எழுத்துக்களும் பிக்ஸல் எனப்படும் புள்ளிகளின் சேர்க்கையினாலேயே உருவாக்கப் படுகின்றன. Pixel எனும் சொல் Picture Elements எனும் இரு வார்த்தைகளிலிருந்தே உருவாகியது. பிக்ஸல்களின் எண்ணிக்கையையே ரெஸலுயூசன் (Resolution) எனப்படுகிறது. கிடையாகவும் நிலைக்குத்தாகவும் உள்ள பிக்ஸல்களின் பெருக்கமாக (640 x 480) இது எடுத்துரைக்கப்படும்.

ஒரு படத்தை உருவாக்கும் பிக்ஸல்களின் எண்னிக்கை அதிகமாயிருப்பின் அந்தப் படம் திரையிலும் அச்சு வடிவிலும் தெளிவாகத் தோன்றும். அதிக என்ணிக்கையிலான் பிக்ஸல் கொண்டு ஒரு படம் உருவாக்கப்படுமாயின் அது உயர் ரெஸலுயூஸன் (High Resolution) கொண்ட படமாகக் கருதப்படும். படத்தின் தெளிவுத் திறனைக் குறிப்பதற்கே ரெஸலுயூசன் எனும் வார்த்தை பயன்படுகிறது. மொனிட்டர், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர் என்பன பல தரப்பட்டட ரெசலுயூசன்களுடன் சந்தையில் கிடைக்கின்றன.

மொனிட்டரானது எழுத்துக்களையும் படங்களையும் படத்தில் காட்டியுள்ளபடி மெட்ரிக்ஸ் எனப்படும் நிரல்களும் நிரைகளும் கொண்ட ஒரு அணியில் புள்ளிகளைக் கொண்டே உருவாக்குகின்றன. இது பிட்மெப் காட்சி எனவும் அழைக்கப்படும். இங்கு ஒவ்வொரு சதுரத்தினாலும் காட்டப்படும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு பிக்சல் எனப்படுகிறது. படத்தில் நிழலிடப்பட்ட பகுதி ஒரு பிக்சலைக் குறிக்கிறது.

கணினித்திரை இந்த அணியினுள்ளே பிக்ஸல்களின் வெவ்வேறு ஒழுங்குகளைப் பயன்படுத்தி எழுத்துக்களையும் படங்களையும் உருவாக்கு கிறது. கருப்பு வெள்ளையிலான ஒரு படத்தை மொனிட்டர் திரையில் உருவாக்குவதற்கு ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பிட் (0 அல்லது 1) பயன்படுத்தப்படுகிறது. இங்கு வெள்ளை நிற பிக்ஸலை பூச்சியமும் (0) கருப்பு நிற பிக்ஸலை ஒன்றும் (1) குறிக்கிறது. வேறு வர்ணங்களைச் சேர்க்கும்போது ஒரு பிக்ஸலைக் குறிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட பிட் அவசியப்படுகிறது. இது ஒரு படத்தின் பிட் டெப்த் (bit depth) எனப்படும். அதிக பிக்ஸல்களைத் தோற்றுவிக்கும்போது ரெஸலுயூசன் உயர் நிலையில் காணப்படும்..

உதாரணமாக ஒரு 8 பிட் அளவிளான பிட் டெப்த் கொண்ட மொனிட்டரில் ஒவ்வொரு பிக்ஸலும் 8 பிட் அளவு கொண்ட வர்ணங்களை உருவாக்கும். அதாவது இரண்டின் எட்டாம் அடுக்கு 28 அல்லது 256 வர்ணங்களை உருவாக்க முடியும். அதேபோல் 24 பிட் மொனிட்டர் மூலம் 16 மில்லியனுக்கு மேற்பட்ட வர்ண வேறுபாடுகளை உருவாக்கலாம்.

பிக்ஸல் என்பது ஒரு படத்தின் மிகவும் சிறிய பகுதியாகவிருப்பதோடு ஒவ்வொரு பிக்ஸலும் மேலும் சிறிய புள்ளிகளைக் கொண்டிருக்கும். சாதாரன ஒரு RGB மொனிட்டரில் ஒவ்வொரு பிக்ஸலும் சிவப்பு (Red), பச்சை (Green), நீல (Blue) நிறத்திலான் மூன்று புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

புதிதாக ஒரு மொனிட்டரை வாங்கும்போது அதன் ரெஸலுயூசனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ரெஸலுயூசன் அடிப்படையிலும் மொனிட்டர்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. அளவில் பெரிய மொனிட்டர் களில் தெளிவான் படத்தைத் தோற்றுவிக்க அவை உயர் ரெசலுயூசன் கொண்டதாயிருக்க வேண்டும்.

ஒரே அளவு ரெஸலுயுஸன் கொண்ட ஒரு படம் சிறிய மொனிட்டர்களில் தெளிவாகவும், பெரிய மொனிட்டர்களில் தெளிவற்றதாகவும் தோன்றும். திரையினளவு அதிகரிக்கும்போது அதே எண்ணிகையான பிக்ஸல்கள் மேலும் பல அங்குளங்களுக்குப் பரந்து விரியும்போது பிக்ஸல்களுக்கிடையே இடைவெளி அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

மொனிட்டர் வகைகள்

VGA (Video Graphics Array): இவ்வகை மொனிட்டர்களின் ரெஸலுயூசன் 640 x 480 பிக்ஸல் கொண்டதாயிருக்கும். அதாவது கிடையாக் 640 பிக்ஸல்களும் நிலைக்குததாக 480 பிக்ஸல்களுடன் மொத்தமாக் 307200 பிக்சல்களையும் கொண்டிருக்கும்

SVGA (Super Video Graphics Array): இவ்வகை மொனிட்டர்களின் ரெஸலுயூசன் 800 x 600 பிக்ஸல் கொண்டதாயிருக்கும். இந்த 15 அங்குல மொனிடர்களில் இந்த தரப்படுத்தலே பயன்படுகிறது.

XGA (Extended Graphics Array): 1,024 x 768 pixels வரையான ரெஸலுயூ சனைக் கொண்டிருக்கும். இது 17 முதல் 19 அங்குல மொனிட்டர்க ளுக்குப் பொருந்தும்.
SXGA (Super Extended Graphics Array): 1,280 x 1,024 pixels வரையிலான் ரெஸலுயூசனைக் கொண்டிருக்கும். 19-21 அங்குல மொனிட்டர்க ளுக்குப் பொருந்தும்.

UXGA (Ultra Extended Graphics Array): 1,600 x 1,200 pixels வரையிலான் ரெஸலுயூசனைக் கொண்டிருக்கும். 21 அங்குல மொனிட்டர்களுக்குப் பொருந்தும்.

மொனிட்டரில் போன்றே டிஜிட்டல் கேமராவிலும் பிக்ஸல் கொண்டே படங்கள் உருவாக்கப்படுகின்றன. குறைந்தளவு ரெஸலுயூசன் கொண்ட கேமராவால் பிடிக்கப்பட்ட படத்தைப் பெரிதாக்கி ப்ரிண்ட் செய்யும்போது அது தெளிவற்றதாகவே தோன்றும். இப்போது முதற் பந்தியை மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொள்ளுங்கள்.

-அனூப்-

-