How to upload a website using FTP
ஒரு வெப் சேர்வரை அணுகி இணைய தளம் ஒன்றை எவ்வாறு பதிவேற்றுவது எனப் பார்ர்ப்போம்.
ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணினி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Transfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (FileZilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.
பைல்ஷிலா என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ் எப்டிபி க்லையன்ட் ஆகும். இதனை நீங்கள் எனும் http://sourceforge.net/projects/filezilla/ இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்யலாம். FileZilla. 3.3.3 எனும் பதிப்பு தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது,
உங்கள் இணைய தளம் சேமிக்கப்படிருக்கும் ஹோஸ்ட் கணினியின் பெயர் அல்லது சேர்வர் முகவரி. உதாரணமாக ftp://ftp.example.com/.. FTP கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். வெப் சேர்வரில் எந்த டிரெக்டரி அல்லது போல்டரில் உங்கள் பைல்களை சேமிக்க வேண்டும் என்ற விவரம். இந்த போல்டர் www அல்ல்து public_html எனும் பெயர்களில் இருக்கலாம். இந்த போல்டரில் சேமிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தை வெப் பிரவுஸரால் கண்டு கொள்ள முடியும்.
பைல் ஒன்றைப் பதிவேற்றுவதற்கு முதலில் பைல்ஷிலா எப்.டி.பீ க்லையண்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு File மெனுவில் Site Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும் Site Manager விண்டோவில் New Site பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது அதன் மேற் பகுதியில் இணைய தளத்தின் பெயரை வழங்குவதற்கு ஏற்றவாறு கர்சர் தோன்றும். அங்கு அந்த தளத்திற்குரிய பொருத்தமான பெயரை வழங்குங்கள். இந்தப் பெயர் உங்கள் தளத்தை அடைவதற்கான இணைய தள முகவரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அடுத்து General டேபின் கீழ் Host எனுமிடத்தில் உங்கள் தளத்திறகான சேர்வர் முகவரியை டைப் செய்யுங்கள். உதாரணமாக ftp://ftp.example.com/. Server type எனுமிடத்தில் FTP தெரிவு செய்யுங்கள். . Port இல்க்கம் வழங்க வேண்டிய அவசியமில்லை
அடுத்து Logon type எனுமிடத்தில் ட்ரொப் டவுன் பட்டியலிலிருந்து Normal தெரிவு செய்யுங்கள். அப்போது User Name மற்றும் Password வழங்கக் கூடியதாக அந்த இடங்கள் மாறும். அவ்விடங்களில் உங்களுக்குத் தரப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்டை வழங்குங்கள்.
நீங்கள் வழங்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் விவரங்கள் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். அதனால் நீங்கள் பைல் அப்லோட் செய்ய விரும்பும் ஒவ்வொரு தடவையும் இந்த விவரங்களை வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. .
எனினும் இணைய மையங்கள் (Internet café) போன்ற பொது இடங்களில் எப்.டிபீ க்லையண்டுகளைப் பயன் படுத்துவதானால் அப்லோட் செய்யும் பணி முடிந்ததுமே அந்த விவரங்களை அப்போதே கணினியிலிருந்து அகற்றி விட்டு வெளியேறுங்கள்.
அடுத்து உங்கள் சேர்வர் கணினியை அடைவதற்கு Connect பட்டனில் க்ளிக் செய்யுங்கள். சேர்வர் கணினியுடனான இணைப்பு வெற்றிகரமாக அமைந்தால் FileZilla விண்டோவின் வலப்புறம் உங்க்ள் தளத்திற்குரிய பைல் போல்டரகளைப் பட்டியலிடக் (Remote Site) காணலாம். அதேபோல் இடப்புற விண்டோவில் உங்கள் கணினியிலுள்ள (Local Site) பைல் போல்டர் மற்றும் ட்ரைவ்களக் காண்பிக்கும். இந்த இரண்டு விண்டோக்களும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் போல் செயற்படும்.
உங்கள் இணைய தளத்தை ஹொஸ்ட் செய்யும் நிறுவனம் வெப் சேர்வரிலுள்ள www, public_html போன்ற எதேனுமொரு போல்டரை உங்களுக்குப் பரிந்துரைத்திருந்தால் அந்த உரிய போல்டரை வலப்புற விண்டோவில் காண்பிக்கும். அதன் மேல் இரட்டைக் க்ளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.
அடுத்து விண்டோவின் இடப்புற விண்டோவில் நீங்கள் அப்லோட் செய்ய விரும்பும் பைலை உங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்து கொள்ளுங்கள்..
பின்னர் அந்த பைலை ட்ரேக் எண்ட் ட்ரொப் (Drag & Drop) முறையில் இழுத்து வலப்புறம் உள்ள உரிய போல்டரில் போட்டு விடுங்கள். உடனடியாக அந்த பைல் அப்லோட் ஆக ஆரம்பிக்கும். . உங்கள் பைலை அப்லோட் ஆகும் செயற்பாட்டை பைல்ஷிலா விண்டோவின் கீழ்ப் பகுதியில் காண்பிக்கும். . அப்லோட் செயற்பாடு முடிந்தவுடன் சேர்வரிலிருந்து இணைப்பைத் துண்டித்து விடலாம். அதற்கு Server மெனுவிலிருந்து Disconnect தெரிவு செய்யுங்கள்.
ஒரு வேளை உங்கள் தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனம் எப்.டி.பீ கொண்டு அணுக விடாமல் த்டுத்திருந்தால் அப்லோட் செய்யும் பணிக்கு வெப் பிரவுஸரையே பயன் படுத்த வேண்டும். என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இணைய தளங்களை நிர்வகிப்பதற்கான கண்ட்ரோல் பேனல் (Control Panel) எனும் வசதி ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படும்.
-அனூப்-