OEM என்றால் என்ன?

OEM என்பது "Original Equipment Manufacturer" என்பதன் சுருக்கமாகும். இதனை "அசல் கருவி உற்பத்தியாளர்" என தமிழில் கூறலாம். அதாவது  மற்றொரு நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்றை உற்பத்தி செய்யும் அல்லது  தயாரிக்கும் ஒரு நிறுவனமே OEM ஆகும்.  OEM என்பது கணினித் துறையில் மட்டுமன்றி பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகின்றன. கணினித் துறையில் OEM என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கலாம்.
பொதுவாக  கணினிகள் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஒரு  Dell  மடிக்கணினியில் உள்ள அனைத்து பாகங்களையும் Dell நிறுவனமே தயாரிப்பதில்லை.  அதெபோல் ஹெச்.பி நிறுவன கணினியில் உள்ள அனைத்து பாகங்களையும் ஹெச்.பி நிறுவனமே தயாரிப்பதில்லை. இந்த நிறுவனங்கள் கணினிகள் வடிவமைக்கும் போது  அவை பிற உற்பத்தியாளர்களிடமிருந்து கூறுகளை கொள்வனவு செய்து தமது கணினிகளில்  இணைத்துக்கொள்கின்றன.
உதாரணமாக, ஒரு Dell - டெல் மடிக்கணினி ஒரு AMD செயலி  (processor)   மற்றும் ஒரு சாம்சங் ஹாட் டிஸ்க்  ட்ரைவைக் கொண்டிருக்கலாம். இங்கு AMD நிறுவனம்  செயலியின்- processor  OEM ஆகவும் சாம்சங் நிறுவனம் ஹாட் டிஸ்க் டரைவின்  OEM ஆகவும் கருதப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள்-Apple நிறுவனத்தின்  iMac  மடிக்கணினி இன்டெல் நிறுவனத்தின்  செயலியையும் (Intel processor) மற்றும் மைக்ரான் நிறுவனத்தின் நினைவக அட்டையையும் (RAM card) கொண்டிருக்கலாம். இங்கு இன்டெல் Intel மற்றும் மைக்ரான் ஆகியவை OEM நிறுவனங்களாகின்றன.

கணினி வன் பொருள் கூறுகளை  மாற்றியமைக்கும் போது  அல்லது மேம்படுத்தும் போது உங்கள் கணினிக்கு OEM கள் பாகங்களை வழங்கும் நிறுவனம் எது என்பதை அறிந்து கொள்வது  பயனுள்ளதாக இருக்கும்.  இதன் மூலம் நீங்கள் விலைக்கு வாங்கியது கணினிக்கான அசல் பாகம் என்பதை  உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட பாகம் சிக்கல்களைக் கொண்டிருந்திருந்தால், வேறொரு தயாரிப்பிற்கு மாறிக் கொள்ளவும் முடிகிறது.

விண்டோஸ் இயங்கு தளத்தில் OEM தகவல்களைத் System Information செயலியின் மூலம் கண்டறியலாம். விண்டோஸில், தொடக்க மெனுவில் "Run" புலத்தில் msinfo32 என  தட்டச்சு செய்வதன் மூலம் இந்த பயன்பாட்டை திறக்க முடியும். இந்த முறைமைத் தகவல்களை Start\ Programs \ Accessories \ System Tools \ ஊடாகவும் காணலாம்.
OEM வன்பொருள் போன்றே OEM  மென்பொருள்களும் பயன் பாட்டில் உள்ளன.  ஒரு நிறுவன கணினியில் பல்வேறு   நிறுவனங்களின் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதாவது பல்வேறு மென்பொருள் டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்கள் ஒரு கணினி விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர் நிறுவப்பட்டிருக்கும்.


ஒரு கணினியில் நிறுவப்பட்டுள்ள  விண்டோஸ்  போன்ற இயக்க முறைமையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.  தங்கள் சொந்த கணினிகளை பல்வேறு  பாகங்களை ஒன்று சேர்த்து தாங்களே உருவாக்கிக் கொள்ள்ளும்  பயனர்கள்  தங்கள் தனி நபர்  கணினிகளில்  நிறுவ Windows  இயங்கு தளத்தின் "OEM” உரிமம் வாங்குவதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

வன்பொருளோ மென்பொருளோ OEM  அடையாளத்துடன் (வேறு எந்த தயாரிப்பு நிறுவன முத்திரையும்-Trade Mark இல்லாமலேயே)   விற்பனைக்கு வரும் பொருட்கள் வழமையான அதன் பொதி செய்யப்பட்ட  விற்பனை விலையை விட மிக மலிவாகப் பெறலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.  இது எப்படி சாத்தியம்? அதை நான் இங்கு ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

முன்னர் குறிப்பிட்டுள்ளவாறு டெல் நிறுவனம் தனது மடிக்கணினி தயாரிப்பிற்கான பத்தாயிரம் நினைவக அட்டைகளை மைக்ரோன் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்த பத்தாயிரம் அட்டைகளில் ஒன்பதாயிரம் அட்டைகளை மாத்திரமே டெல் நிறுவனம் பயன் படுத்தி தனது கணிகளை விற்பனைக்கு விட்டது. மீதமுள்ள ஆயிரம் அட்டைகளை மறுபடி மைக்ரோன் நிறுப்வனத்திடம் ஒப்படைக்கப் பட வில்லை. குப்பைத் தொட்டிக்கும் அவை அனுப்பப்படவில்லை.



அவற்றை  OEM தயாரிப்புகளாக கொள்வனவு செய்த விலைக்கோ அல்லது அதனை விட குறைந்த விலையிலோ வேறொரு முகவருக்கு  விற்பனை செய்து விடுகிறது. இந்த OEM பாகங்கள் அசல் உற்பத்தியாளரின் தயாரிப்புத்தான்.  அவை தரம் மிக்கவைதான். அனால் அவை பொதி செய்யப்படுவதில்லை. அவற்றிற்கு உத்தரவாதமும் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட அந்த பாகத்தோடு வழங்க வேண்டிய பிற கேபல்கள், ட்ரைவர் மென்பொருள்கள் போன்றனவும் கூட வழங்கப்படுவதில்லை.

தரமான பொருள் மலிவாகக் கிடைக்கிறது எனும் ஒரே காரணத்திற்காக OEM தயாரிப்புகளைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்களும் உள்ளனர்.

மைக்ரோஸொப்ட் விண்டோஸ், மைக்ரொஸொப்ட் ஆபிஸ், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Virus Guard) போன்ற ஏராளமான மென்பொருள்களின் OEM உரிமத்தை அதன் வழமையான விற்பனை விலையை விட மிக மிகக் குறைந்த விலையில் E-Bay தளத்தில்  கொள்வனவு செய்து சட்ட விரோதமின்ன்றி (legally) அதனை அசலாகவே பயன் படுத்தலாம் என்பதை அதனைப் பற்றி அறியாதவர்களுக்கு அறியத் தருகிறேன்.