வாட்ஸ்-அப் குழுமங்களில் உங்கள் அனுமதி இல்லாமலேயே சிலர் உங்களைக் கோர்த்து விடுவதைத் தடுப்பது எப்படி?



நமது நண்பர்கள் உறவினர்கள் சக ஊழியர்கள் மற்றும் நமக்கு அறிமுகமில்லாத  நபர்கள் கூட WhatsApp இல் புதிய குழுமங்களை  உருவாக்கி, அவர்களின் குழுமங்களுக்கு எங்களையும் சேர்த்து விடுகிறார்கள். தங்கள் குழுமங்களுக்கு எங்களை சேர்ப்பதற்கு முன்பு அவர்கள் எங்களிடம் அனுமதி கேட்பதில்லை. ஏனெனில் பயனர்கள் குழுமங்களை  உருவாக்கவும் மற்றும் அனுமதி இல்லாமல் வெறு நபர்களை சேர்க்கவும்  WhatsApp அனுமதிக்கிறது. அதாவது வாட்ஸ்-அப் குழுமங்களில் குழும நிர்வாகிகள் உங்கள் அனுமதி இல்லாமலேயே உங்களை  சேர்த்து விட முடியும். ஆனால் வாட்ஸ்-அப் பயனருக்கு இது பெரும் தொல்லை தரும்; விடயமாகக் கருதப்படுகிறது.

நீங்கள் WhatsApp ஐப் பயனராக இருந்தால் இந்த அன்புத் தொல்லையை பல முறை சந்தித்திருக்கலாம்.

ஒரு WhatsApp குழுமத்தில் அவர்கள் எங்களை சேர்த்து விட்டாலும் குழுவிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தையும் வாட்ஸ்-அப் எங்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் குழும நிர்வாகிகள் எங்களை மீண்டும் மீண்டும் சேர்த்து விட வாய்ப்புள்ளது.  சில வேளை அவ்வாறு எங்களை குழுமத்தில் இணைத்துக் கொண்டவர் நமக்கு மிக வேண்டியவராக இருந்தால் நாம் வெளியேற விரும்புவதில்லை.

இப் பிரச்சனை தொடர்பாக WhatsApp நீண்ட காலமாக பயனர்களிடமிருந்து புகார்களை பெற்று வந்தது.  இறுதியாக  WhatsApp நிர்வாகம் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  WhatsApp குழுமங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் இப்புதிய அம்சத்தை வாட்ஸ்-அப்பின் புதிய பதிப்பில் (WhatsApp 2.19.98 ) அண்மையில் சேர்த்துள்ளது.
இந்த வசதியை  நீங்கள் பயன் படுத்த விரும்பினால், WhatsApp செயலியின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் இந்த வசதி ஒரு குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே தற்போது தற்காலிகமாக வழங்கப்பட்டுளது என்பதையும் நினைவில் கொள்க. வாட்ஸ்-அப் பயனர்கள் அனைவரும் இந்த வசதியைப் பெற இன்னும் சில வராங்கள் எடுக்கலாம் என வாட்ஸ்-அப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கீழுள்ள வழிமுறையின் மூலம் WhatsApp இல் குழுமங்களுக்கு உங்களை யாரெல்லாம் இணைக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்க முடியும்.

1. முதலில் WhatsApp செயலியை திறந்து கொள்ளுங்கள்.

2. அடுத்து  வலது மேல் மூலையில் உள்ள 3 செங்குத்து புள்ளிகளில் தட்டி. வரும் மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள்.

3. அடுத்து  Account -> Privacy விருப்பத்தை தட்டுங்கள்.

4. பின்னர் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யும் போது, Groups விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். 
WhatsApp இல் குழுமங்களில் உங்களில் சேர்க்க யாரை அனுமதிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய விருப்பமாகும். (Groups தெரிவு தோன்ற வில்லையாயின் நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும) ;.



இந்த அமைவுகளை மாற்ற, Groups விருப்பத்தைத் தட்டவும், இது புதிய பக்கத்தில் குழும அமைவுகளைத் திறக்கும்.

5. இப்போது என்னை குழுமங்களுக்கு யாரெல்லாம் சேர்க்கலாம் பிரிவின் கீழ் தற்போது தேர்ந்தெடுக்க மூன்று  விருப்பங்களை நீங்கள் காணலாம்.

·      Everyone அனைவரும்
·      My contacts எனது தொடர்புகள்
·      Nobody யாருமில்லை

Everyone  தெரிவு செய்வதன் மூலம் எவரும் உங்கள் அனுமதியின்றி குழுமங்களுக்கு உங்களை சேர்க்கலாம்.

My contacts தெரிவு செய்வதன் மூலம் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் குழுமங்களுக்கு உங்களை சேர்க்க முடியும்.

Nobody  தெரிவு செய்வதன் மூலம்  எவரும் உங்களை குழுமங்களில் சேர்க்க முடியாது. குழும நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் உங்களை தொடர்பு கொள்வதன் மூலம் மட்டுமே தங்கள் குழுமங்களில் இனி உங்களை சேர்க்க முடியும்.