DBMS - Some known and unknown terms
DBMS - தெரிந்ததும் தெரியாததும் !!
ஏதோவொரு விடயம் சார்ந்ததும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டதும் ஏதோவொரு வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டதுமான தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து, வாக்காளர் பட்டியல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
தரவுகளை வகைப் படுத்தல் (sorting) , தொடர்புபடுத்தல் (relating) ,கணித்தல் (Calculating) போன்ற செயற்பாடுகளுக்குட்படுத்தி அத்தரவுகளை பயனுள்ளஅர்த்தமுள்ள தகவலாக மாற்றுவதை தரவுச் செயற்பாடு (DataProcessing) எனப்படும். உதாரணம: சம்பளப் பட்டியல் தயாரித்தல், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள், வரவு-செலவு திட்டமிடல்
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தரவுகளைச் சேகரித்து அவற்றை ஒரே தடவையில் ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தல் Batch Processing) பெட்ச் ப்ரோஸெஸ்ஸிங் எனப்படும். உதாரணம்: மின்சாரப் பட்டியல் தயாரித்தல்
தரவுகளை உடனுக்குடன் நிகழ் நேரத்தில் ஏதோவொரு செயற்பாட்டிற்குட்படுத்தலை நிகழ்நேர தரவுச் செயற்பாடு (Online / Real time Processing) எனப்படும். உதாரணம்: வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள்
த்ரவுத் தளமொன்றை உருவாக்கவும் அதனை நிர்வகிக்கவும் பயன்படும் கணினி மென்பொருள்களை DBMS (Database Management System) எனப்படும்.
தரவுத் தள நிர்வாகம் எனும் போது தரவுத் தளமொன்றிற்குப் புதிதாக தரவுகளைச் சேர்த்தல், தரவுகளை நீக்குதல், மீளப் பெறல், அவற்றைப விரும்பிய கோணத்தில் பார்வையிடல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகள் அடங்குகின்றன.
MS-Access, Oracle, Fox Pro, My SQL, dBase III+, என்பன சில DBMS மென்பொருள்களாகும்.
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்புடன் வெளிவரும் ஒரு DBMS மென்பொருளே எம்.எஸ். எக்ஸஸ (MS-Access) ஆகும்.. அதேபோன்று ஓபன் ஒபிஸ் தொகுப்பில் Base எனும் பெயரிலான DBMS மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. .
எம்.எஸ்.எக்ஸஸ் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளில் தரவுத் தளமொன்றின் (file extension) பைல் நீட்டிப்பு .MDB ஆக இருந்தது. எம்.எஸ்.எக்ஸஸ் 2007 பதிப்பில் .ACCDB எனும் பைல் போமட் (file format) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அட்டவணை (Table), படிவம் (Form), அறிக்கை (Report), வினவல் (Query) என்பன எந்தவொரு DBMS மென்பொருளிலும் பொதுவாகக் காணக்கூடியதும் தரவுத்தளமொன்றை நிர்வகிக்கப் பயன்படுவதுமான நான்கு (Database Objects) கருவிகளாகும்.
அட்டவணையே தரவுத் தளமொன்றின் அடிப்படையாகும். அட்டவணையிலிருந்தே வினவல், படிவம், அறிக்கை என்பன உருவாக்கப்படுகின்றன.
பொதுவான புலம ஒன்றின் மூலம் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தக் கூடிய பல அட்டவணைகளைக் கொண்ட ஒரு தரவுத்தளம் உறவு நிலைத் தரவுத் தளம் (Relational Database) எனப்படும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தேவையான தரவுகளை மீளப் பெறலாம்.
ஒரே ஒரு அட்டவணையை மாத்திரம் கொண்ட தரவுத் தளம் ஒற்றைக் கோப்பு தரவுத்தளம் (Flat File) எனப்படும்.
இரண்டு அட்டவணைகளில் உள்ள ஒரு பொதுவான புலத்தை Key Field எனப்படும்.
ஒரு அட்டவணையானது குறிப்பிட்ட விடயம் சார்ந்த தரவுகளைக் கொணடிருக்கும். ஒரு அட்டவணையில் ஒவ்வொரு நெடுவரிசையும் (Columns) ஒரு புலத்தையும் (fields) ஒவ்வொரு வரிசையும் (rows) ஒரு பதிவையும் (records) குறிக்கும்.
ஒவ்வொரு நெடுவரிசையும் ஒரு விடயம் சார்ந்த தகவலின் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதுடன் அவை ஒரே மாதிரியான தரவுகளாகவும் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு வரிசையும் வேறுபட்டதாயிருப்பதுடன் அவை ஒரு முழுமையான தகவலையும் கொண்டிருக்கும்.
ஒரு அட்டவணையில் ஒரே தரவுக் கூட்டம் மறுபடியும் வழங்கப் படுவதைத் தவிர்ப்பதற்காகப் பயன்படும் புலமே .(Primary Key) முதன்மை சாவியாகும்..இந்த முதன்மைச் சாவிப் புலமானது ஒவ்வொரு பதிவையும் (record) மற்றையதிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டும் வன்ணம் தனியான இயல்பைக் (Unique) கொண்டிருக்கும். உதாரணம் : அடையாள அட்டை இலக்கம், பாடசாலை அனுமதி இலக்கம்,
எம்.எஸ்.எக்ஸஸ் அட்டவணை ஒன்றில் முதன்மைச் சாவியாகப் பயன் படுத்தக் கூடிய ஒரு புலம் இல்லையெனில் Auto Number எனும் புலம் உருவாக்கப்படும்.
ஒரு அட்டவணையில் பிரதான புலமாகச் செயற்டும் ஒரு புலம் மற்றுமொரு அட்டவணையில் சாதாரண ஒரு புலமாகப் பயன் படுத்தப்படுமானால் அது அந்நியச சாவி (Foreign Key) எனப்படும்.
தரவுத் தளமொன்றில் தேவையான தரவுகளை குறிப்பிட்ட சில நிபந்தனைகளோடு வேறாக்கிப் பெறலாம் . இதற்கு குவரி (Query) எனும் கருவி பயன் படுத்தப்படும்.. இது த்ரவுத்தளத்தை வினவுதல் எனும் பொருள் படும். தேவையெனின் குவரியிலிருந்து படிவம் ஒன்றையோ அறிக்கையொன்றையோ உருவாக்கலாம்.
தரவுகளை உள்ளீடு செய்யவும் அவற்றைப் பார்வையிடவும் அட்டவணைகள் பொருத்தமான தெரிவாக அமையாது. எனவே தரவுகளை இலகுவாக உள்ளீடு செய்யவும் அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தரவுகளைப் பார்வையிடவும் (Form) படிவங்கள் உருவாக்கப்படுகின்றன. படிவங்கள் ஒரு சமயத்தில் ஒரு பதிவை மட்டுமே காண்பிக்கும்.
தரவுகளைப் பர்ரவையிடவும் அவற்றை அச்சிட்டுக் கொள்ளவும் அறிக்கை (Report பயன்படுகிறது, அறிக்கை மூலம் தரவுகளின் சாராம்சத்தை (Summary) மட்டும் வேறாக்கியும் பெறலாம். .
Text, Memo, Number, Date/ Time , Currency, Yes / No எக்ஸலில் உள்ள சில டேட்டா வகைகளாகும்.
ஒரு அட்டவணையில் தேவையற்ற தகவல்களைத் தவிர்த்து தேவையான தகவல்களை மட்டும் சில நிபந்தனைகளோடு வடி கட்டுதலை பில்டர் (Filter) எனப்படும்.
இரண்டு அட்டவணைகளுக்கிடையே One-to-One, One-to- Many, Many-to-Many என மூன்று விதமான உறவு நிலைகளை உருவாக்கலாம்.
.ஒரு அட்டவணையில் உள்ள ஒரு பதிவு அடுத்த அட்டவணையிலுள்ள ஒரே ஒரு பதிவுடன் மாத்திரமே பொருந்துமாயின் அது One-to-One இணைப்பு எனப்படும். இங்கு இரண்டு அட்டவணைகளிலும் ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒரு பொதுவான புலம் காணப்படும். உதாரண்மாக உங்களுக்கு ஒரு துணை இருக்கலாம். அந்தத் துணைக்கு நீங்கள் மட்டுமே துணை.
One-to-One இணைப்பு ஒரு சிறந்த தொடர்பு முறை எனக் கருத முடியாது. ஏனேனில் அந்த இரு அட்டவணைகளையும் ஒரே அட்டவணையாக இணைத்துக் கொள்ளலாம்..
ஒரு அட்டவணையில் உள்ள சில நெடு வரிசைகள் (Columns) அடிக்கடி பயன் படுத்துபவையாகவும் சில நெடு வரிசைகள் அடிக்கடி பயன் படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் ஒரே அட்டவணையை இரண்டாகப் பிரித்து அங்கு One-to-One இணைப்பை உருவக்கிக் கொள்ளலாம்.
ஒரு அட்டவணையில் உள்ள ஒரு பதிவு அடுத்த அட்டவணையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளுடன் பொருந்துமாயின் அது One-to-many இணைப்பு என்ப்படும்.. உதாரணமாக உங்கள் தாய்க்கு பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தாய்தான் இருக்க முடியும்.
பொதுவாக One-to-many இணைப்பே அதிகம் பயன் பாட்டிலுள்ளது. .
ஒரு அட்டவணையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகள் அடுத்த அட்டவணையிலுள்ள ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளுடன் பொருந்தக் கூடியதாயிருப்பின் அது Many-to-Many Relationship எனப்படும். உதாரணமாக ஒரு பாடசாலையிலுள்ள ஒவ்வொரு ஆசிரியரும் பல மாணவர்களுக்குக் கற்பிப்பர். அதேபோல் ஒவ்வொரு மாணவனுக்கும் பல ஆசிரியர்கள் கற்பிக்க முடியும்.
-அனூப்-