Internet Protocols !


இணையத்தில் பயன்படும் சில Protocols !


இரண்டு நபர்கள் உரையாடும் போது ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்து கொள்ள வேண்டுமானால் இருவரும் ஒரே மொழியைப் பயன் படுத்த வேண்டும். அங்கு இலக்கண மரபுகள் மீறப்படினும் ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

அதேபோன்று இரண்டு கணினிகளுக்கிடயே தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டுமானால் அங்கும் ஒரு பொதுவான மொழி பயன் பாட்டிலிருக்க வேண்டும். எனினும் இங்கு “இலக்கண மரபுகள்” மீறப்பட முடியாது தகவல் பரிமாற்றம் எவ்வாறு நடை பெற வேண்டும், அந்த தகவலின் அமைப்பு என்ன வடிவத்திலிருக்க வேண்டும் போன்ற விடயங்களை இரண்டு கணினிகளும் முன் கூட்டியே அறிந்திருத்தல் வேண்டும் என்பதோடு அனைத்து விவரங்களும் தெளிவாக வரையறுக்கப்படவும் வேண்டும்.

இவ்வாறு ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் கணினிகள் ஒன்றோடொன்று தொடர்பாடலை மேற்கொள்ளவென சில பொதுவான விதி முறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதனையே புரட்டகோல் (protocol) எனப்படுகிறது. இந்த விதி முறைகள் சர்வதேச அங்கீகாரத்துடன் நிர்ணயம் செய்யப்படுவதுடன் எந்த இடத்திலிருந்தும் கணினிகள ஒன்றோடொன்று தொடர்பாடலாம் என்பதையும் உறுதி செய்கின்றன.

இணையம் வழியே வெவ்வேறு விதமான தகவல்களைக் கடத்தவும் கையாளவும் என சில பொதுவான விதி முறைகள் பயன் பாட்டிலுள்ளன. அவற்றுல் சில புரட்டகோல்களான TCP, IP, UDP, POP, SMTP, HTTP, FTP என்பன பற்றி சிறிது விளக்கலாம் என நினைக்கிறேன். இந்த புரட்டகோல்கள் ஒரு சாதாரண கணினிப் பயனரும் அவ்வப்போது எதிர்ப்படுபவையாகும்.

TCP (Transmission Control Protocol) மற்றும் IP (Internet Protocol) என்பன ஒன்றோடொன்று இணைந்து செயற்படும் இரண்டு வேறுபட்ட புரட்டகோல்களாகும். இணையத்தில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட புரட்டகோல்கள் இணைந்து செயற்படுவதும் உண்டு. இங்கு ஒரு புரட்டகோலின் செயற்பாடுகள் மற்றொன்றிற்கு ஆதரவாயிருக்கும். . அவை ஒவ்வொன்றும் தமக்கென வழங்கப்பட்டிருக்கும் பணியை நிறை வேற்றுவதோடு மொத்தத்தில் அவை ஒன்றிணைந்து முழுமையான பணியை நிறை வேற்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட பணியை நிறை வேற்றுவதற்கு பல புரட்டகோல்கள ஒன்றிணைவதை "stack" எனப்படுகிறது.

TCP/IP என்பது இணையத்தில் பயன் படும் பொதுவான ஒரு வார்த்தையாக இருந்தாலும் இது இரண்டு வேவ்வேறு விதமான பணிகளைக் கொண்டுள்ளது. TCP/IP புரட்டகோலே இணையத்தில் அடிப்படை செயற்பட்டினை நிறை வேற்றுகிறது. எனலாம். இந்த புரட்டகோல் இணையத்தில் மட்டுமன்றி உள்ளக கணினி வலையமைப்புகளிலும் (LAN) பயன் படுத்தப்படுகிறது.

இணையத்தில் அல்லது ஒரு கணினி வலையமைப்பில் ஒரு பைலை அனுப்பப்படும் போது அந்த பைலானது முழுமையாக அனுப்பப்படுவதில்லை, அது சிறு பகுதிகளாக உடைக்கப்பட்டே அனுப்பப்படுகிறது. அந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் பெக்கட் (packet) எனப்படுகிறது.

ஒரு பைல் சிறு பகுதிகளாக்கப்படுவதனால் அந்த பகுதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் அதன் காரணமாக அந்த பைல் வேகமாக இலக்கை அடையக் கூடியதாயிருக்கும். உரிய இலக்கை அடைந்தது,ம் இந்த பெக்கெட் ஒவ்வொன்றும் ஒன்று சேர்க்கப்படும். ஒரு பைல் சிறு பகுதிகளாக்கப்படுவதன் மூலம் டேட்டா பயணிக்கும் போது ஏற்படும் தகவல் இழப்பும் ஓரளவு குறைக்கப்படுகிறது.

இவ்வாறு பைல்களை பக்கெட்டுகளாக பொதி செய்யவும் மறு படி அந்த பெக்கெட்டுகளை சரியான ஒழுங்கில் ஒன்று சேர்ப்பதற்கும் TCP எனும் புரட்டகோல் பயன் படுத்தப்படுகிறது. இந்த TCP புரட்டகோல் டேட்டா பயணிக்கையில் எந்த பெக்கட்டும் இழக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்கிறது. தகவல் இழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய அந்த பெக்கட்டை மறுபடி அனுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கும்.

வலையமைப்பில் பயணிக்கும் டேட்டாவானது உரிய இலக்கை அடையச் செய்வதில் Internet Protocol (IP) பயன் படுகிறது. வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கணினியும் தனித்துவமான ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும்.. இதனை ஐபி முகவரி IP address. எனப்படும்.

வலையமைப்பில் பயணிக்கும் ஒவ்வொரு பெக்கட்டும் அது எந்தக் கணினியிலிருந்து செல்கிறது.? எந்தக் கணினியை நோக்கிச் செல்கிறது? அது எத்தனையாவது பெக்கட்? போன்ற பல விவரங்களைக் கொண்டிருக்கும். ஒரு பெக்கட்டானது உரிய இலக்கை அடையு முன்னர் பல பாதைகளில் பல கணினிகளைக் கடந்து செல்லும்.. ஒவ்வொரு பெக்கட்டும் உரிய இலக்கை அடையச் செய்வதை இந்த IP புரட்டகோல் உறுதி செய்கிறது.

User Datagram Protocol (UDP) என்பது TCP/IP குடும்பத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு புரட்டகோலாகும். டேட்டா கிரேம் என்பது ‘பெக்கேட்’ போன்றதே. எனினும் ஒரு பெக்கெட் ஒன்றுக்கு மேற்பட்ட டேட்டகிராம்களைக் கோண்டிருக்கும். சிறியளவிலான தகவ்ல் பரிமாற்றத்தில் இந்த UDP புரட்ட கோலானது IP யுடன் இணைகிறது,

 -அனூப்-