Sleep /  Hibernate / Hybrid Sleep

 விண்டோஸ் இயங்கு தளம் கணினி மற்றும் துணைச் சாதனங்களுக்கான மின் சக்தியைக் கட்டுப்படுத்தவென Sleep /  Hibernate / Hybrid Sleep  என பல வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் திறந்திருக்கும் அனைத்து ஃபைல்களையும் மூடிவிட்டு கணினியை நிறுத்தி மறுபடியும்  விண்டோஸ் இயக்கத்தினை ஆரம்பித்து  அதே ஃபைல்களையும் செயலிகளையும்  திறப்பதற்கு ஆகும் நேரத்தைக்  குறைக்க முடிவதோடு மின் சக்தியையும் சேமிக்க முடிகிறது, மடிக்கணினி பயன்பாட்டில் இவ்வசதிகள்  மிகவும் உபயோகமானவை

Sleep

ஸ்லீப்”  எனும் (உறங்கு) நிலையில் கணினி மின் சக்தியை சேமிக்கிறது,  இது DVD  இயக்கி ஒன்றில் இயக்க நிலையிலிருக்கும் ஒரு DVD யை தற்காலிகமாக போஸ் (Pause)  பட்டன் மூலம் நிறுத்துவதற்கு சமமாகும். ”ஸ்லீப்”  நிலையில் கணினியின் அனைத்துச் செயற்பாடுகளும் நிறுத்தப்படுவதுடன் திறந்திருக்கும் செயலிகள் மற்றும்  ஆவனங்கள் போன்றன  நினைவகத்தில் சேமிக்கப்பட்டு கணினி குறைந்தளவு மின் சக்தியில் இயங்கிக் கொண்டிருக்கும். ஸ்லீப் நிலையில் இருந்து மிக விரைவாக ஒரு சில வினாடிகளில் வழமையான நிலைக்கு  முழுமையான மின் சக்தி நுகர்வோடு மீள முடியும். முன்னர் விண்டோஸின் பழைய பதிப்புக்களில் இருந்த Standby  நிலைக்கு நிகரானதே இந்த ஸ்லீப்.

குறுகிய நேரத்திற்கு கணினியை நிறுத்தி வைப்பதற்காகவே ஸ்லீப் மோட் பயன் படுகிறது. இங்கு அதிகளவு மின் சக்தியைப் பயன்படுத்தாவிட்டாலும் சிறிதளவு பயன்படுகிறது.

Hibernate

ஹைபனேட் எனும் வசதியும் ஸ்லீப் போன்றதே. எனினும் ஹைபனேட்டில் தற்போது திறந்து வைத்துப் பணியாற்றும் அத்தனை பைல்களையும் செயலிகளையும் ஸ்லீப் மோடில் போன்று நினைவகத்தில் சேமிக்காமல் டெஸ்க்டொப்பின் பிரதியாக ஹாட் டிஸ்கில் சேமித்து கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. மறுபடியும் கணினியை இயக்கும் போது முன்னர் திறந்து வைத்துப் பணியாற்றிய ஃபைல்கள் செயலிகள் அனைத்தும் ஹைபனேட் செய்வதற்கு முன்னர் இருந்த அதே நிலையில் டெஸ்க் டொப்பில் கொண்டு வந்து விடுகிறது.

இங்கு கணினி முழுமையாக ஓய்வுக்கு வருவதுடன் மின் சக்தி நுகர்வு முற்றாக துண்டிக்கப்படுகிறது. மேலும் ஹைபனேட் மோடில் இருந்து சாதாரண நிலைக்குத் திரும்புவதற்கு ஸ்லீப் நிலையை விட சற்று அதிக நேரம் எடுக்கும். .

கணினியை இயக்கி விட்டு நீண்ட நேரம் கணினியை பயன்படுத்தப் போவதில்லை என்றிருந்தால் ஹைபனேட் நிலையில் கணினியை நிறுத்தலாம்.

மடிக்கணிகள் உபயோகிப்போருக்கு ஹைபனேசன் அதிகம் பயனளிக்கிறது. இதன் மூலம் மடிக் கணியிலுள்ள  பேட்டரியிலுள்ள  மின் சக்தியைச் சேமிக்க முடிகிறது.

ஒரு குறிப்பிட்டட நேரம் கணினியில் எவ்வித செயற்பாடுகளும் இல்லாதிருந்தால் விண்டோஸ் தானாக கணினியை ஹைபனேட் செய்து நிறுத்தி விடும். அவ்வாறே மடிக் கணினிகளில் உள்ள பேட்டரியில் மின் சக்தியின் அளவு குறைந்து வருமானால் அதனை உணர்ந்து, பேட்டரி முழுமையாக செயலிழக்க முன்னர் கணினியை ஹைபனேட் நிலைக்கு மாற்றி  ஃபைல்களை பாதுகாப்பாக சேமிப்பதுடன் கணினியையும் நிறுத்தி விடுகிறது.

Hybrid Sleep

ஹைபிரிட் ஸ்லீப் என்பது ஸ்லீப் மற்றும் ஹைபிரிட் வசதிகள்  இரண்டும் இணைந்ததாகும்.  இது டெஸ்க்டொப் கணிகளுக்கே மிகவும் உகந்தது.  இங்கு திறந்திருக்கும் அனைத்து செயலிகளையும் ஆவணங்களையும் நினைவகத்திலும் வன் தட்டிலும் சேமித்து விட்டு கணினியை  குறைந்தளவு மின் சக்தி நுகர்வு நிலையில் ஓய்வில்  வைத்திருக்கும். ஹைபிரிட் ஸ்லீப்  நிலையிலிருந்து மறுபடி விரைவாகக் கணினியை உயிர்ப்பிக்க முடியும்.

ஹைபிரிட்-ஸ்லீப் நிலை டெஸ்க்டொப் கணினிகளில் இயல்பாக செயல் நிலைக்கு வருவதுடன் மடிக்கணினிகளில் ஹைபிரிட்-ஸ்லீப்  செயற்படாது. டெஸ்க்டொப் கணினிகளில் ஸ்லீப் மோடில் கணினியை  நிறுத்தினாலும் அது ஹைபிரிட் ஸ்லீப் நிலைக்கே செல்கிறது.

.
சில விசைப்பலகைகளில் கணினியை  ”ஸ்லீப்”  நிலைக்கு மாற்றவும் ”ஸ்லீப்” நிலையிலிருந்து  மீளவும் Sleep / Wake என தனியாக விசைகள் காண்ப்படும். அது போன்ற விசைகள் இல்லாதிருந்தால் மவுஸை அசைப்பதன் மூலம் அல்லது கீபோர்டில் ஏதேனுமொரு விசையை  அழுத்துவதன் மூலம்”ஸ்லீப் ” மோடிலிருந்து உயிர்ப்பிக்கலாம். .

உங்கள் கணியில் Sleep /  Hibernate / Hybrid Sleep  போன்றவற்றில் மாற்றங்களைச் செய்வதற்கு Control panel  இல் Power Options தெரிவு செய்யுங்கள்.