What is VPN?

 VPN என்பது கணினி வலையமைப்புடன் (network) தொடர்புபட்ட ஒரு வார்த்தை.    VPN என்பது Virtual Private Network என்பதைக் குறிக்கிறது. இதனை  ”மெய்நிகர் பிரத்தியேக  வலையமைப்பு” என தமிழில் கூறலாம். ஒரு பெரும் பரப்பு வலையமைப்பை (WAN-WIde Area Network) அல்லது இணையத்தைப் பயன்படுத்தி இரகசியமாய், பிரத்தியேகமாய்த் தொடர்பு கொள்வதே VPN தொழில்நுட்பம்.

VPN 2
VPN தொழில் நுட்பத்தில்  இணையம் போன்ற ஒரு பெரும் பரப்பு கணினி வலையமைப்பில்  தரவுகள் பயணிக்கின்றன. அதாவது VPN இடத்துரி வலையமைப்பு LAN (Local Area Network)  போன்று ஒரே இடத்தில் அமையப்பெற்றதல்ல.  தரவு மறைக்குறியாக்கம் (encryption) போன்ற பாதுகாப்பு  முன் ஏற்பாடுகளால் VPN  தொழில் நுட்பத்தில் பெரும் பரப்பு வலையமைப்பினூடாகச் செல்லும் அனைத்து தரவுகளும் பதுகாப்பாக உரிய இலக்கை அடைகின்றன. அதனால் அப்பெரும் பரப்பு வலையமைப்பு பொதுவானதாய் இருந்தாலும் ”பிரத்தியேக” (private) கணினி வலையமைப்பாய் மாறிவிடுகிறது.

VPN1இன்னும் எளிமையாகச் சொன்வதானால் பலபேர் மத்தியில் இருக்கும் இரண்டு காதலர்கள் சங்கேத மொழியில் உரையாடிக் கொள்வது போன்றதே இந்த வி.பி.என் தொழில் நுட்பம்.  அவர்கள் சப்தமிட்டுப் பேசுவதும் சைகையில் பேசுவதும் வழமையான உரையாடலாய் அடுத்தவர்களுக்குத் தோன்றினாலும் அவர்களின் பேச்சின் உள்ளார்ந்த அர்த்தத்தை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள்.

VPN தொழில் நுட்பம் பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் வணிக நிறுவனங்கள் குத்தகைக்குப் பெறப்படும் (leased line) இணைப்புக்களைப் பயன் படுத்தின. எனினும் அவை அதிக செலவினத்தைக் கொடுப்பதால் தற்போது VPN தொழில் நுட்பத்தையே பல நிறுவனங்கள் பயன் படுத்த ஆரம்பித்துள்ளன.

பல நகரங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்கு இணையத்தைப் பயன் படுத்தி ஒவ்வொரு கிளைக் காரியாலயங்களுக்கும் தரவுகளை அனுப்ப வேண்டிய தேவை வரலாம். எனவே இணையத்தினூடாக அனுப்பப்படும் இத்தகவலை VPN அமைப்பை உருவாக்கி அனுப்புவதன் மூலம் தகவல் மறைக்குறியாக்கம் செய்யப்படுவதால் தகவலுக்கு உச்ச பாதுகாப்பு கிடைக்கிறது.

VPN இணையத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அக இணையத்திற்கு (intranet) நிகரானது எனலாம். . பெரிய வணிக நிறுவனங்கள் மாத்திரமன்றி, சிறிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கள் நிறுவனத்துடன் VPN கணக்கொன்றை உருவாக்கி அதன் மூலம் வீட்டிலிருந்தோ அல்லது வேறிடத்திலிருந்தோ நிறுவனக் கணினியை பாதுகாப்பாக அணுக முடியும்.. மடிக்கணினியுடன் அடிக்கடி வெளியே பயணிக்கும் நிறுவன ஊழியர்களுக்கு இந்த VPN மிகவும் பயனுள்ள வசதியாகும்.  தற்போது கையடக்கத் தொலைபேசிகளிலும், VPN இணைப்பை உருவாக்கிப் பயன் படுத்த முடியும், என்பது கூடுதல் வசதியாகும்.