What is OEM? OEM என்றால் என்ன?
OEM என்பது “Original Equipment Manufacturer” என்பதன் சுருக்கமாகும். இதனை “அசல் கருவி உற்பத்தியாளர்” என தமிழில் கூறலாம். அதாவது மற்றொரு நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்றை உற்பத்தி செய்யும் அல்லது தயாரிக்கும் ஒரு நிறுவனமே OEM ஆகும். OEM என்பது கணினித் துறையில் மட்டுமன்றி பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகின்றன. கணினித் துறையில் OEM என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கலாம்.
உதாரணமாக, ஒரு Dell – டெல் மடிக்கணினி ஒரு AMD செயலி (processor) மற்றும் ஒரு சாம்சங் ஹாட் டிஸ்க் ட்ரைவைக் கொண்டிருக்கலாம். இங்கு AMD நிறுவனம் செயலியின்- processor OEM ஆகவும் சாம்சங் நிறுவனம் ஹாட் டிஸ்க் டரைவின் OEM ஆகவும் கருதப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள்-Apple நிறுவனத்தின் iMac மடிக்கணினி இன்டெல் நிறுவனத்தின் செயலியையும் (Intel processor) மற்றும் மைக்ரான் நிறுவனத்தின் நினைவக அட்டையையும் (RAM card) கொண்டிருக்கலாம். இங்கு இன்டெல் Intel மற்றும் மைக்ரான் ஆகியவை OEM நிறுவனங்களாகின்றன.
கணினி வன் பொருள் கூறுகளை மாற்றியமைக்கும் போது அல்லது மேம்படுத்தும் போது உங்கள் கணினிக்கு OEM கள் பாகங்களை வழங்கும் நிறுவனம் எது என்பதை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் விலைக்கு வாங்கியது கணினிக்கான அசல் பாகம் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட பாகம் சிக்கல்களைக் கொண்டிருந்திருந்தால், வேறொரு தயாரிப்பிற்கு மாறிக் கொள்ளவும் முடிகிறது.
விண்டோஸ் இயங்கு தளத்தில் OEM தகவல்களைத் System Information செயலியின் மூலம் கண்டறியலாம். விண்டோஸில், தொடக்க மெனுவில் “Run” புலத்தில் msinfo32 என தட்டச்சு செய்வதன் மூலம் இந்த பயன்பாட்டை திறக்க முடியும். இந்த முறைமைத் தகவல்களை Start\ Programs \ Accessories \ System Tools \ ஊடாகவும் காணலாம்.
OEM வன்பொருள் போன்றே OEM மென்பொருள்களும் பயன் பாட்டில் உள்ளன. ஒரு நிறுவன கணினியில் பல்வேறு நிறுவனங்களின் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதாவது பல்வேறு மென்பொருள் டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்கள் ஒரு கணினி விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர் நிறுவப்பட்டிருக்கும்.
Post Comment