Dfference between Bluetooth and Wi-Fi?
Bluetooth Vs Wi-Fi – என்ன வேறுபாடு?
செல்லிடத் தொலைபேசி போன்று செல்லிடக் கணினியும் (mobile computers) தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வந்துள்ளது.. அதற்கேற்றாற் கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றது. அமர்ந்த இடத்திலிருந்தே வயர் இன்றி கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்களிடையே தொடர்பாடல் மேற்கொள்ளவே கணினிப் பயனர் பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் கம்பியில்லாத் தொடர்பாடல் முறை பெரிதும் வரவேற்கப்படுகிறது. வயறின்றி ஏனைய கணினிகளுடன் இணைக்கும் வசதியுடன் கூடிய மடிக்கணினிகளும் தற்போது அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றன. நீங்கள் ஒரு மடிக் கணினி அல்லது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவரா? அப்படியனால் ப்லூடூத், வைபை போன்ற வார்தைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பயன்படுத்தியும் இருக்கலாம். இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் என்ன செய்கிறன? எந்த வகையில் அவை வேறு படுகின்றன?
ப்லூடூத் - வைபை இவை இரண்டுமே கம்பியில்லா கணினி வலையமைப்புக்கான தொழில் நுட்பங்களே இவை கம்பிகளுக்குப் பதிலாக வான் அலைகளை (Radio Frequency) மூலம் வலையமைப்பை உருவாக்குகின்றன.. இவையிரண்டும் 2.4 Ghz அலைவரிசையில் செயல்பட்டாலும் அவை பயன் படுத்தப்படும் விதத்தில் மாறுபட்டு நிற்கின்றன. வைபை தொழில் நுட்பத்தின் பிரதான நோக்கம் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களில் கம்பியில்லா அதிவேக இணைய இணைப்பைப் பெறுவதே என கடந்த வாரம் பார்த்தோம். எனினும் ப்லூடூத் தொழில் நுட்பத்தின் பிரதான பயன்பாடு ஒரு தனி நபர் சார்ந்த வலயமைப்பை உருவாக்குவதாகும். .
அதாவது ஒரு தனி நபருடைய கணினியோடு கையடக்கத் தொலைபேசி ப்ரிண்டர், கேமரா போன்ற சாதனங்களை குறுகிய ஒரு வீச்சினுள் வயரின்றி இணைத்து அவற்றிற்கிடையே டேட்டாவைப் பரிமாறிக் கொளவதாகும். இவ்வாறான இணைப்பை Personal Area Network (PAN) என அழைக்கப்படும்.
உதாரணமாக ப்லூடூத் வசதி கொண்ட ஹெட்செட்டைப் (hands free) பொருத்துவதன் மூல்ம் வாகனமொன்றைச் செலுத்தியவாறோ அல்லது தங்கள் வேலையில் எந்த இடையூறுமில்லாமலே செல் போன் அழைப்புக்கு செவி மடுக்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் ப்லூடூத் மூலம் ஒரு செல்போனைக் கணினியில் இணைத்து பைல் பரிமாற்றம். செய்தல், மற்றும் செல்போனிலிருந்து இணையத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வசதிகளையும் பெறலாம்.
ப்லூடூத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும்போது முதலில் அந்த சாதனங்களை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். இதனைப் pairing என்ப்படும். அவ்வாறு இரண்டு சாதனங்களைப் பெயார் செய்யும் போது அவற்றில் ஒரு சாதனம் மற்றைய ப்லூடூத் வசதி கொண்ட சாதனத்தைத் தேடிக் கண்டறிய வேண்டும். குறிப்பிட்ட வீச்சினுள் தேடிக் கண்டறிந்து கொள்ளும். அடுத்த ப்லூடூத் சாதனத்தை அதன் திரையில் காண்பிக்கும். அவ்வாறு கண்டறியும் சாதனத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பாஸ்கீ எனும் ஒரு இலக்கத்தை அழுத்த வேண்டும். இரண்டு சாதனத்திலும் ஒரே பாஸ்கீ (passkey) வழங்கி அது ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இரண்டு சாதனங்களும் தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்..
- தற்போது மடிக் கணினிகள் வைபை மற்றும் ப்லூடூத் இணைப்புக்கான வசதியுடனேயே தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் ப்லூடூத் / வைபை வசதி இல்லை எனின் வைபை அடெப்டர் போன்று ப்லூடூத் எடப்டரைப் புறம்பாக பொருத்திக் கொள்ளலாம். இதனை Dongle -டொங்கில் எனவும் அழைக்கப்படும். - வைபை இணைப்பில் பொதுவாக கணினிகளே இணைக்கப்படுகின்றன. அதிவேக இணைய இணைப்பு தவிர வைபை மூலம் பைல், ப்ரோக்ரம் போன்ற மென்பொருள்களையும் ப்ரிண்டர், ஸ்கேனர் போன்ற வன்பொருள்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
- வைபையை விடவும் ப்லூடூத் தொழில் நுட்பம் பயன் படுத்துவது எளிமையானது, ஏனெனில் வைபை தொழில் நுடபத்தைச் செயற்படுத்த ரூட்டர், மோடெம் போன்ற சாதங்களை நிறுவுதல் அவற்றில் செட்டிங் மாற்றியமைத்தல் போன்ற பல செயற்பாடுகள் உள்ளன. அவ்வாறே மற்றுமொரு கணினியிலிருந்து வளங்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் சில செட்டிங் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.. ப்லூடூத்தில் இது போன்ற சிரமங்கள் இல்லை.
- ப்லூடூத் தொழில் நுட்பம் 30 முதல் 100 அடிகள் வரையிலான மிகவும் குறுகிய வீச்சினுள்ளேயே டேட்டாவைக் கடத்துகிறது. எனினும் வைபை சிக்னல் அதனை விட அதிகமாக 800 அடிகள் அல்லது அதற்கு மேலும் செல்லத்தக்கது.
- ப்லூடூத் மற்றும் வைபை என்பன அவற்றிற்கேயுரிய ப்ரொட்டோகோல எனும் விதிமுறைகளைக் கொண்டுள்ளன. தற்போது ப்லூடூத் தொழில் நுட்பம் அதன் நான்காம் பதிப்பை அடைந்துள்ளது. அதேவேளை வைபை தொழில் நுட்பத்தில் அண்மைய பதிப்பாக (வர்யர்லெஸ் என்) 802.11n, எனும் விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
- ஏராளமான டெஸ்க்டொப் மற்றும் மடிக் கணினிகளை வைபை மூலம் இணைத்து ஒரு கம்பியில்லா உள்ளக வலையமைப்பை Local Area Network (LAN) உருவாக்கி விடலாம். எனினும் ப்லூடூத் கொண்டு ஒரு உள்ளக வலையமைப்பை உருவாக்க முடியாது. இதன் மூலம் தனி நபர் கணினி வலயமைப்பே உருவாக்கப்படுகிறது.
- வைபை இணைப்பில் 802.11g எனும் பதிப்பில் டேட்டா பரிமாறும் வேகமானது 54 Mbps அளவில் செயல்படுகிறது. எனினும் ப்லூடூத் இணைப்பின் பதிப்பு ஒன்றில் வேகமானது 1 Mbps அளவிலேயே செயல்படுகிறது.
வைபை – ப்லூடூத், இரண்டுக்குமிடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் பயன்மிக்கவை. பரவலாக பயன்பாட்டிலுள்ளவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
-அனூப்-