Sweet Home 3D


Sweet Home 3D

ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ (Sweet Home 3D) என்பது ஒரு இல்ல அலங்கார மென் பொருள். இது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு தளபாடத்தையும் எவ்வாறு பொருத்தமான இடத்தில் வைத்து ஒழுங்கு படுத்தலாம் என்பதைக் கற்றுத் தருகிறது. வீட்டின் எப்பகுதியிலிருக்கும் தளபாடங்களையும் வேறு இடங்களுக்கு நகர்த்தினால் எவ்வாறு தோறறமளிக்கும் என்பதை அவற்றை நகர்த்தாமலேயே இந்த ஸ்வீட் ஹோம் மூலம் த்ரீ-டீ இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த “இனிய இல்லத்தில்” 75 வெவ்வேறு விதமான தளபாட மாதிரிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வைத்துப் பொருத்தம் பார்க்கலாம். அத்தோடு உங்கள் வீட்டின் அறைகளின் நீள அகலம் போன்ற அளவுகளையும் அவற்றில் வைக்கப்பட்டுள்ள தளபாடங்களின் விவரங்களையும் கொண்டு புதிதாக ஒரு ஒரு வீட்டு மாதிரி ஒன்றைக் கூட உருவாக்கி விடலாம். அதாவது நீங்களே உங்கள் வீட்டுக்கான கட்டடக் கலஞராக மாறலாம்.

வடிவமைக்கும் வீட்டை முப்பரிமாணத்தில் (3D) தோன்றச் செய்தல், தோற்றமளிக்கும் கோணத்தை மாற்றியமைத்தல் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தல் போன்றன ஸ்வீட் ஹோமில் அடங்கியுள்ள சிறப்பம்சங்களாகும். அத்தோடு வீட்டு வ்டிவமைப்பு மாதிரியை ஒரு வீடியோ பைலாக சேமித்துக் கொள்ளவும் முடியும்.

எளிய இடை முகப்பைக் கொண்ட இதனை சாதாரண கணினிப் பயனரும் இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம். உங்கள் கற்பனையில் தோன்றும் வீட்டு அலங்காரத்தை அப்படியே கணினித் திரையில் நிஜமாக்கிப் பார்க்கலாம். வீட்டு அலங்காரத்தில் உங்கள் திறமையைக் கூட இதன் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். பைல் அளவு 30 எம்.பி கொண்ட இந்த மென்பொருளை sweethome3d.eu எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். ஸ்வீட் ஹோமில் பணியாற்றுவதற்கான ஏராளமான தளபாட மாதிரி உருவங்களையும் இணையத்திலிருந்து டவுன் செய்து கொள்ள முடியும்.

ஸ்வீட் ஹோமில் பணியாற்றுவது கடினம் என நினைப்பவர்கள், இந்த இணைய தளத்திலிருக்கும் வீடீயோ பாடத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாலே போதும். அதன் மூலம் இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம். இதே இணைய தளத்தில் பயனர் வழிகாட்டியும் தரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஸ்வீட் ஹோம் மென்பொருளை வைத்து நாளைக்கே நீங்களும் ஒரு கட்டடக் கலைஞர் தொழில் பார்க்கலாம் என்றெல்லாம் கற்பனை பண்ணதீர்கள். இது ஒட்டோ கேட் (Auto CAD) போன்று ஒரு மேம்பட்ட தொழில் ரீதியாகப் பயன்படுத்தக் கூடிய மென்பொருளல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-அனூப்-