What is IPv6?

IPv6 என்றால் என்ன?

இணையத்தில் இணையும் அனைத்து கணினிகளும் கையடக்கக் கருவிகளும் ஐபி முகவரி எனும் தனித்துவமான இலக்கத்தினால் இனம் காணப்படுகின்றன. கணினிகளுக்கு ஐபி முகவரியைப் பங்கீடு செய்யும் தற்போது  பயன் பாட்டிலுள்ள முறையானது  IPv4 என அழைக்கப் படுகிறது. IPv4 முறையில் ஒவ்வொரு கணினிக்கும் 32 பிட் கொண்ட ஒரு ஐபி முகவரி (உதாரணம் 120.121.123) வழங்கப் படுகிறது. எனினும் இணையத்தில் இணையும் கணினிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரிப்பதனால் IPv4 முறையில் வழங்கப்படும் ஐபி முகவரியானது இன்னும் சில வருடங்களில் தீர்ந்து போகும் நிலை வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் காரணமாகவே தற்போது IPv6 எனும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. IPv4  முறைமையில் 32 பிட் பயன் படுத்தப்படும் அதே வேளை IPv6 இல் 128 பிட் பயன் படுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் கணினிகளுக்குப் பங்கீடு செய்யக் கூடிய ஐபி முகவரியின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கிறது. எடுத்துக் காட்டாக IPv4  முறையில் (2^32) =  4,294,967,296  ஐபி முகவரிகள் வழங்கக் கூடியதயிருப்பதோடு IPv6 இல் (2^128) = 340282366920938000000000000000000000000 ஐபி முகவரிகள் வழங்க அனுமதிக்கிறது. .

IPv6 இல் ஐபி முகவரிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவை சற்று சிக்கலானவைதான். IPv6 இல் ஒவ்வொரு ஐபி முகவரியும் hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh எனும் வடிவில் இருக்கும். இங்கு ஒவ்வொரு  hhhh பகுதியும் நான்கு இலக்கத்திலான ஒரு பதினறும என்ணைக் (hexadecimal) குறிக்கின்றன. அதாவது இங்கு ஒவ்வொரு h எழுத்தும் 0 முதல் 9 வரையிலும்  A முதல்  F   வரையிலும் அமையப் பெற்றிருக்கும்(உதாரணம் F704:0000:0000:0000:3458:79A2:D08B:4320)

IPv6 கொண்ட ஐபி முகவரிகள் சிக்கலான வடிவில் இருந்தாலும் இம்முறையானது கணினிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது. மேலும் அதிக எண்ணிக்கையிலான ஐபி முகவரிகள் வழங்க முடிவதால் மற்றுமொரு கணினியின் ஐபி முகவரியை யூகிப்பது அசாத்தியம்.

தற்போது பயன் பாட்டிலுள்ள அனேக கணினிகள் IPv6 முறையை ஆதரிப்பதால் விரைவில் புதிய இணைய நியதிகள் அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் IPv6 ற்கு இன்னும்  கணினிகள் முழுமையாக மாறவில்லையாயினும் தற்போது இரண்டு முறைகளையும் பின்பற்றி கணினிகளுக்கு ஐபி முகவரிகள் வழங்கும் முறை பயன் பாட்டில் உள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். இன்னும் ஒரு சில வருடங்களில் IPv6  மட்டுமே பயன் பாட்டில் இருக்கும்.
அனூப்