Blu-ray Disc

வந்தாச்சு ப்ளூ-ரே டிஸ்க்!

கணினிகளில் டேட்டாவைப் பதிய வென ப்லொப்பி டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் எனப் பல ஊடகங்கள் (Removable Media) உள்ளன. முதன் முதலில் காந்தப் புலனைப் பயன்படுத்தி சேமிக்கக் கூடிய எட்டு அங்குள அள்விலான பெரிய ப்லொப்பி டிஸ்க் அறிமுகமாகியது. அப்போது சுமார் 80 கிலோபைட் அளவுடைய டேட்டாவையே அவற்றில் பதிய முடிந்தது . பின்னர் 5 ¼ அங்குள அளவில் 360 கேபீ அளவான டேட்டாவைப் பதிக்கக் கூடிய ப்லொப்பி டிஸ்குகள் அறிமுகமாகின. அதன் பின்னர் 3 ½ அங்குள அளவுடைய கைக்கடக்கமான 1.44 மெகாபைட் அளவில் டேட்டாவைப் பதியக் கூடிய ப்லொப்பிகள் பாவனைக்கு வந்தன. அதற்கடுத்து 200 எம்பீ அளவில் டேட்டாவை பதிக்கக் கூடிய சிப் டிஸ்க் (Zip Disk) அறிமுகமானது. எனினும் இவை எதுவும் அதிக கொள்ளவு கொண்ட பைல்களை சேமிக்கக் கூடியதாய், எமது தேவையை நிவர்த்தி செய்வதாய் இருக்கவில்லை.

அதன் பிறகு ஒளிக் கதிர் கொண்டு சேமிக்கக் கூடிய கொம்பேக்ட் டிஸ்க் எனும் சீடிக்கள் அறிமுகமாயின. சிடிக்கள மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதோடு 700 எம்பி அளவிலான டேட்டாவையும் பதிக்கக் கூடியதாயிருந்தது. சுமார் 500 ப்லொப்பி டிஸ்கில் பதிக்கக் கூடிய டேட்டாவை ஒரே சிடியில் பதிக்க முடிந்தது. அதன் பின்னர் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியில் சீடிக்களின் இடத்தை டீவிடிக்கள் கைப்பற்றின. டீவிடி என்பது சீடிக்களை ஒத்திருந்தது. எனினும் சீடியை விட அதிக டேட்டாவை டீவிடிகளில் பதிய முடிந்தது. டீவிடிக்களில் பதியப்படும் வீடியோ காட்சிகள் அதிக தரம் வாய்ந்ததாகவும் ஒரு லேயர் கொண்ட டீவிடியில் 4.7 கிகாபைட் வரையிலான டேட்டாவையும் பதிய முடிகிறது. அதாவது ஐந்து சீடிக்களில் பதியக் கூடிய டேட்டாவை ஒரே டீவிடியில் பதிந்து விடலாம். ஒரே டீவிடியில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வருவது நீங்கள் அறிந்த விடயமே. .

ஒளிக்கதிர் கொண்டு த்கவல் பதியும் ஊடகங்களான சீடி, டீவிடி தொழில் நுட்பத்தையடுத்து தற்போது அறிமுகமாகியுள்ளதே பீடி (BD) எனும் ப்ளூ-ரே டிஸ்க் (Blu-ray Disc) ஆகும். இது வரை பிரபலாமாகியிருந்த டீவிடியின் இடத்தைக் கைப்பற்ற ஆரம்பித்திருக்கிறது இந்த ப்ளூ-ரே டிஸ்க். ப்ளூ-ரே டிஸ்க் உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஓடியோவைப் பதிய மட்டுமன்றி சீடி,டீவிடிக்களை விட பன்மடங்கு டேட்டாவையும் பதியக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

(High Definition ) ஹை டெபினிசன் எனும் உயர் தரத்திலான வீடியோ காட்சியைப் பதியக் கூடியவறு இந்த ப்ளூ-ரே டிஸ்க் உருவாக்கப் பட்டுள்ளது, ஹை டெபினிசன் எனும் உயர் தரத்திலான ஒரு திரைப் படத்தை ஒரே டீவிடியில் பதிய முடியாது. அதற்கு டீவிடியை விடவும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு சேமிக்கும் ஊடகம் அவசியம். அதற்குத் தீர்வாக வந்ததே இந்த ப்ளூ-ரே டிஸ்க்.

ஹை டெபினிசன் எனும் அதி உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஓடியோவைப் பதியவும் (Write) , மீளப்பதிதல் (Re-write) , படித்தல் (Read) போன்ற செயற்பாட்டுக்கு, அதிக கொள்ளளவுடைய ஒரு ஊடகத்தை உருவாக்கும் நோக்கில் உலகின் இலத்திரனியல் சாதனங்களை தாயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Blu-ray Disc Association (BDA) எனும் அமைப்பைத் தோற்றுவித்து ப்ளூ-ரே போமட்டை உருவாக்கின.

ஒரு லேயர் கொண்ட ஒரு பக்கத்தில் மட்டும் பதியக் கூடிய ஒரு ப்ளூ-ரே டிஸ்கில் 25 கிகாபைட் டேட்டாவை பதிய முடியும். இது சாதாரண ஒரு சீடி கொள்ளும் டேட்டாவை விட சுமார் 40 மடங்கு அதிகமானது. அத்தோடு இரட்டை லேயர் கொண்ட ப்ளூ-ரே டிஸ்கில் 50 கிகாபைட் அளவில் டேட்டாவைப் பதியலாம்.

ஹை டெபினிசன் போமட்டில் இரட்டை லேயர் கொண்ட பீடியில் 9 மணி நேரம் ஓடக் கூடிய வீடியோவையும்., சாதாரண (standard) போமட்டில் பதிவதானால் சுமார் 23 மணி நேரம் ஓடக் கூடிய வீடியோ படங்களையும் பதிந்து விடலாம்.

உருவத்தில் சீடி மற்றும் டீவிடிக்களின் அளவினை ஒத்ததாகவே ப்ளூ-ரே டிஸ்கும் காணப்படுகின்றது. அது மட்டுமன்றி கையாளப்பபடும் தொழில் நுட்பமும் ஒத்ததாகவே உள்ளது. சீடி மற்றும் டீவிடியை விட ப்ளூ-ரே டீஸ்கில் காணப்படும் அடிப்படை வேறுபாடு யாதெனில் அதில் டேட்டாவை பதியவும் படிக்கவும் பயன் படுத்தப்படும் லேசர் கதிராகும். சீடி, டீவிடி என்பவற்றில் சிவப்பு நிறத்திலான லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படும் அதேவேளை ப்ளூ-ரே டிஸ்கில் நீல நிற லேசர் கதிர்கள் பயன் படுத்தப்படுகின்றன. நீல் நிற லேசர் கதிர்கள் குறுகிய அலை (wavelength) நீளத்தைக் கொண்டவை. (450 Nanometer) சிவப்பு நிற லேசர் கதிர்கள் 650 நெனோ மீட்டர் அலை நீளம் கொண்டவை.. நீல நிற லேசர் கதிர்களால் சிறு பரப்பிலும் ஊடுறுவ முடியும். . இதன் காரணமாகவே அவற்றில் அதிக டேட்டாவை பதிய முடிகிறது.

நீல நிறக் லேசர் கதிர்கள் பயன்படுத்துவதனாலேயே ப்ளூ-ரே டிஸ்க் எனும் பெயரை இடந்த டிஸ்க் பெறுகிறது. அதாவது ப்ளூ (blue-நீலம்) என்பது பயன்படுத்தப்படும் லேசர் கதிரின் நிறத்தையும் ரே (ray) என்பது ஒளிக் கதிர் என்பதையும் குறித்து நிற்கிறது. எனினும் இங்கு blue எனும் வார்த்தையிலுள்ள "e" எழுத்து கை விடப்பட்டுள்ளது.

டொஸீபா நிறுவனமும் ஹை டெபினிசன் வீடியா பதிவுக்கென HD-DVD எனும் டிஸ்கை ப்ளூ-ரே டிஸ்கிற்குப் போட்டியாக அறிமுகப்படுத்தியது. எனினும் ப்ளூ-ரே டிஸ்கின் கொள்ளளவை விட குறைந்ததாகவே அவை காணப்பட்டன. என்வே டொஸீபா நிறுவனம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதோடு HD-DVD யை தயாரிப்பதையும் நிறுத்திக் கொண்டது.

இந்த ப்ளூ-ரே டிஸ்கை வழமையான சீடி அல்லது டீவிடி ப்லேயர் மூலம் இயக்க முடியாது. இதனை ப்ளூ-ரே டிஸ்க் ப்லேயர் கொண்டு மட்டுமே இயக்கலாம். எனினும் ப்ளூ-ரே டிஸ்க் ப்லேயர் கொண்டு சீடி மற்றும் டீவிடிக்களை இயக்க முடியும். இதனை ஆங்கிலத்தில் (Backward Compatibility) எனப்படுகிறது.

தற்போது சீடி ரொம், டீவிடி ரொம்மிற்குப் பதிலாக கணினிகளில் இந்த ப்ளூ-ரே டிஸ்க் ரொம் இணைந்து வர ஆரம்பித்துள்ளது. சீடி, டீவிடி போன்றே பீடியிலும் BD -R, BD-RE, BD-ROM என மூன்று வகைகளுள்ளன. இவற்றில் ஹை டெபினிசன் வீடியா மட்டு மன்றி டேட்டாவையும் பதியலாம். கணிணியில் ப்ளூ-ரே டிஸ்குடன் ஒத்திசையக் கூடிய மென்பொருள்களாக Roxio- Easy Media Creator, Click to Disc, InterVideo WinDVD-BD என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்த தலை முறையினர் சீடி, டீவிடிக்குப் பதிலாக இந்த ப்ளூ-ரே டிஸ்கையே பயன்படுத்தப் போகின்றனர். இந்த ப்ளூ-ரே டிஸ்குடன் தொழில் நுட்ப வளர்ச்சி நின்று போகுமா? இல்லவேயில்லை. புற ஊதாக் கதிர் (Ultra Violet Rays) கொண்டு பதியக் கூடிய 500 ஜிபீ கொள்ளளவுடைய டிஸ்கைத் தயாரிக்கும் முயற்சியில் பயனியர் எனும் நிறுவனம் இப்போதே முயன்று வருகிறது…

உள்ளூர் சந்தையில் ப்ளூ-ரே டிஸ்க் கிடைக்குமா என அறிந்து கொள்ள தலை நகரில் பிரபலமான ஒரு கணினி விற்பனை நிலையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ப்ளூ-ரே டிஸ்க் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாத அங்கிருந்த விற்பனையாளரிடமிருந்து சற்று நேர அமைதிக்குப் பின்னர் இவ்வாறு பதில் வந்தது. “ஐயா, இது வீடியோ ஷொப் அல்ல. இது கம்பியூட்டர் ஷொப்.” ஒரு வேளை ப்ளூ என்ற வார்த்தைக்கு அவர் வேறு அர்த்தம் கொடுத்தாரோ என்னவோ.

- அனூப் -