Google Chrome has arrived

வந்தாச்சு  கூகிள் க்ரோம்

தொன்னூறாம் ஆண்டுகளின் இறுதியில் நெட்ஸ்கேப் நெவிகேட்டர், இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் ஆகிய இரண்டு வெப் பிரவுஸர்களுக்குமிடையில் இருந்த பிரவுசர் யுத்தத்தில் (Browser War) இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் வெற்றி பெற்று நெவிகேட்டர் காணாமல் போனது. பின்னர் இந்த யுத்தத்தில் சபாரி, ஒபெரா, மொஸில்லா பயர்பொக்ஸ் என்பன இது வரை காலமும் ஈடுபட்டு வந்தன. தற்போது இந்தப் போட்டியில் புதிதாக இணைந்துள்ளது கூகில் நிறுவனத்தின் க்ரோம் (Chrome) எனும் இணைய உலாவி. கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி குரோமின் சோதனைப் (Beta Version) பதிப்பை அறிமுகப் படுத்தியது கூகில் நிறுவனம். கூகில் நீறுவனம் வழங்கும் ஏனைய சேவைகள் போன்றே குரோம் வெப் பிரவுஸரின் செயல்திறனும் ஏனைய வெப் பிரவுஸர்களுக்குச் சவால் விடும் வகையில் இருப்பது ஒரு சிறப்பாகும்.

க்ரோம் வெப் பிரவுஸர் மொஸில்லா பயபொக்ஸ் போல் ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருளாகும். பயபொக்ஸ் போன்றே இதற்கும் எவரும் (Add-On) எட்-ஓன் உருவாக்கிப் போடலாம். க்ரோம் பிரவுஸர் தற்போது விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்கு தளங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மேக் மற்றும் லினக்ஸ் இயங்கு தளம் உபயோகிப்போர் இன்னும் சிறிது காலம் க்ரோமின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

க்ரோம் வெப் பிரவுசர் வித்தியாசமான அதேவேளை எளிமையான் ஒரு இடை முகப்பைக் கொண்டுள்ளது க்ரோம். திரையின் அதிகமான பகுதி நாம் பார்வையிடும் இணைய தளத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. திரையை ஆக்கிரமிக்கும் வண்ணம் நீளமான மெனு பாரோ டூல் பாரோ க்ரோமில் இல்லை.

மொஸில்லா பயர்பொக்ஸில் போல் இதிலும் டேப்ட் பிரவுஸிங் (Tabbed Browsing) எனும் வசதி இருப்பதனால் ஒரே நேரத்தில பல இணைய தளங்களைப் பார்வையிட முடிவதோடு ஒவ்வொரு டேபும் தனித்து இயங்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரவுசர்களில் இவ்வாறு ஒரே நேரத்தில் பல தளங்களை அணுகும் போது ஒரு டேப் சரிவர இயங்க மறுத்தால் பிரவுஸரையே மூட வேண்டியிருக்கும். எனினும் க்ரோமில் அந்த குறிப்பிட்ட டேபை மட்டும் மூடி விட்டாலே போதும். தவிர பிரவுசர் முடங்கிப் போகாது என கூகில் உறுதியளிக்கிறது

விண்டோஸில் இருப்பது போன்ற டாஸ்க் மேனேஜர் குரோமிலும் இருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல தளங்களைப் பார்வையிடுகையில் எந்த தளம் அதிக நினைவகத்தைப் பயன்படுத்துகிறது, எந்த தளம் அதிக தகவலிறக்கம் செய்கிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள் முடிவதோடு கணினிக்குப் பாதிப்பை உண்டாக்கும் தளத்தினை வராமல் தடுக்கவும் முடியும்..

ஏனைய பிரவுசர்களில் போன்று இங்கு ஹோம் பேஜ் என எதுவும் கிடையாது. வெப் பிரவுசரை திறக்கும்போதே இறுதியாகப் பார்த்த ஒன்பது இணைய தளங்களைச் சிறிய அளவில் காண்பிக்கிறது. அதிலிருந்து நாம் விரும்பும் தளத்தை தெரிவு செய்து முதலில் வர வைக்கலாம்.

மற்ற வெப் பிரவுசர்களில் போலன்றி இணைய முகவரி டைப் செய்யவும் தேடற் சொற்களை டைப் செய்யவும் வெவ்வேறு கட்டங்கள் இல்லை. இணைய முகவரி டைப் செய்யும் இடத்திலேயே தேடற் சொற்களையும் டைப் செய்து தேடலை மேற்கொள்ளலாம்.. இதற்கு Omnibox எனப் பெயரிடப்பட்டுள்ளது. கூகில். இணைய முகவரி வடிவத்திலில்லாத எதனை டைப் செய்தாலும் அது ஒரு தேடற் சொல் என உணர்ந்து தேடலை ஆரம்பிக்கிறது. அத்தோடு தேடலின் போது தேடற் சொல்லை ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்யும்போதே அதற்குப் பொருத்தமான சொற்களை எமக்குக் காட்டிவிடும் (auto complete) எனும் வசதியுமுள்ளது.

குரோமில் நாம் பார்வையிடும் இணைய தளங்களின் பெயர்கள், தேடற் சொற்கள் மற்றும் தேடும் தகவல்களை மற்றவர்கள் அறியா வண்ணம் பிரவுஸிங் செய்யும் வசதியுமுள்ளது. அதற்கென இங்கு நீங்கள் தேடும் தகவல்கள் கணினியில் சேமிக்கப்படா வண்ணம் பிரவுஸிங் செய்யலாம். ஒரே நேரத்தில் பொதுவான விண்டோ மற்றும் தனிப்பட்ட விண்டோ என திறந்து பணியாற்றலாம். ஒரே கணினியைப் பல பேர் உபயோகிக்கும் சூழலில் அல்லது பிரவுஸிங் செண்டர் போன்ற இணைய மையங்களில் இணைய தளங்களைப் பர்வையிடுவோருக்கு இந்த வசதி பெரிதும் உதவும்.

இவை போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது கூகிலின் க்ரோம். தற்போது பாவனையிலுள்ள வெப் பிரவுசர்களை விட பாதுகாப்பு, வேகம் மற்றும் ஸ்திரத்தனமை என்பவற்றில் மேம்பட்டதாக உருவாக்கப்பட் டுள்ளது க்ரோம் வெப் பிரவுஸர். 8.43 எம்.பீ பைல் அளவு கொண்ட க்ரோம் தற்போது 42 மொழிகளில் கிடைக்கிறது இந்த இணைய உலாவியை http://www.google.com/chrome எனும் இணணய் தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

- அனூப் -