What is Open Source ?


Open Source என்றால் என்ன?


ஒரு உயர் நிலை கணினி மொழி கொண்டு எழுதப்பட்ட ப்ரோக்ரம் எனும் ஆணைத்தொடரிலுள்ள வரிகளை சோர்ஸ்கோட் (source code) எனப்படுகிறது. இந்த சோர்ஸ்கோட் ஆனது கம்பைலர் (compiler) எனும் விசேட மொழி மாற்றும் ப்ரோக்ரம் கொண்டு கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு இயந்திர மொழிக்கு (machine code) மாற்றப்படுகிறது.. கம்பைல் செய்யப்பட்ட சோர்ஸ் கோடை ஒப்ஜெக்ட் கோட் (object code) எனப்படும். விலைக்கு வாங்கும் அல்லது இணையத்திலிருந்து டவுன்லோட் செய்யும் ஒவ்வொரு மென்பொருளும் கம்பைல் செய்யப்பட்டு செயல் படத்தயார் (run) நிலையிலேயே எமக்குக் கிடைக்கிறது

கம்பைல் செய்யப்பட்ட பின்னர் ஒரு மென்பொருளில் மாற்றங்கள் செய்வதும் மீண்டும் அதனை சோர்ஸ்கோட் வடிவிற்கு மாற்றுவதும் இயலாத அல்லது மிகவும் கடினமான காரியமாகும். இதனால் ஒரு மென்பொருளின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு ஒரு ப்ரோக்ரமர் உருவாக்கினார் என்று அறிந்து கொள்ள முடியாது போகிறது. அதாவது சோர்ஸ்கோட் மூடி மறைக்கப்படுகிறது. இது வியாபார நோக்கில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சாதகமான விடயமாகும். அதாவது சோர்ஸ்கோடை எவரும் பிரதி செய்து கொள்ளவோ அல்லது அதனைக் கொண்டு தமது மென்பொருளுக்குப் போட்டியாக வேறொன்றை உருவாக்கவோ முடியாது போகிறது.

ஓபன்சோர்ஸ் என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டது. கம்பைல் செய்யப்பட ஒரு மென்பொருளுடன் கூடவே அதன சோர்ஸ்கோடும் வழங்கப்படுகின்றது. அதாவது இங்கு சோர்ஸ்கோட் மூடி மறைக்கப்படாமல் அதன் பெயருக்கேற்ப திறந்து காட்டப்படுகிறது. இதன் மூலம் திறமையுள்ள எவரும் ஒரு மென்பொருளில் விரும்பிய மாற்றங்கள் செய்யவும் அதனை மேம்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. ஓபன்சோர்ஸ் செயற் திட்டத்தை ஆதரிப்போரும் ஓபன்சோர்ஸ் மென்பொருளாக்கத்தில் ஈடுபட்டிருப்போரும் சோர்ஸ்கோடில் மாற்றம் செய்வதையும் அதனை மேம்படுத்துவதையும் வரவேற்கின்றனர். இதனால் ஒரு மென்பொருள் பல வல்லுனர்களின் கைகளால் செப்பனிடப்பட்டு வழுக்கள் களையப்பட்டு சிறப்பான வடிவத்தைப் பெறுவதோடு அதிக பயனுள்ளதாகவும் மாறிவிடுகிறது.

ஒரு மென்பொருளை ஓபன்சோர்ஸ் மென்பொருளாகாக் கருதப்படு வதற்குக் சில விதி முறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

· மென்பொருளை இலவசமாக கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.
· அதனுடன் சோர்ஸ்கோடையும் இணைக்க வெண்டும்.
· விரும்பிய எவரும் சோர்ஸ்கோடில் மாற்றங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும்.
· மாற்றம் செய்யப்பட்ட சோர்ஸ்கோடை மீள விநியோகித்தல் வேண்டும் என்பன அந்த விதி முறைகளிற் சிலவாகும்.

ஓப்னசோர்ஸ் செயற்திட்டம் மூலம் ஏராளமான மென்பொருள்களும் மென்பொருள் கருவிகளும் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. ஓபன்சோர்ஸ் மென்பொருளுக்கு உதாரணமாக லினக்ஸ் இயங்கு தளத்தைக் குறிப்பிடலாம். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த Linus Torvalds என்பவர் 1991 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது யுனீக்ஸ் இயங்கு தளத்தை அடிபபடையாகக் கொண்டு லினக்ஸ் எனும் பெயரில் ஒரு புதிய இயங்கு தளமொன்றை வடிவமைத்ததார். பின்னர் அதன் 0.02 எனும் பதிப்பை GNU General Public License எனும் உரிமத்தின் கீழ் வெளியிட்டார். GNU என்பது இலவச மென்பொருள் களுக்கு உரிமம் வழங்கும் அமைப்பாகும்.

அனேகமான் மென்பொருள்களின் உரிமமானது அதனைப் பிரதி செய்து பகிர்ந்து கொள்வதற்கும் அதில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதிப்பதில்லை. எனினும் GNU General Public License என்பது இதற்கு மாறுபட்டது. அதாவது ஒரு இலவச மென்பொருளை பகிரவும் மாற்றங்கள் செய்வதற்குமான சுதந்திரத்தை இந்த உரிமம் வழங்குகிறது. அத்தோடு இந்த உரிமத்துக்கமைய சோர்ஸ்கோடும் அதன பிரிவுகளும் எப்போதும் ஒபனசோர்ஸாகவே பேணப்படுவதற்கும் வகை செய்கிறது.

எனினும் ஓபன்சோர்ஸ் மென்பொருள்களுக்கு உத்தரவாதமும் தொழில் நுடப உதவியும் கிடைப்பதில்லை என்பது ஒரு குறைபாடாகும்.. ஓபன்சோர்ஸ் மென்பொருள்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமமானது, அதனை எவரும் தமது தேவைக்கேறறபடி மாற்றிக் கொள்ள அனுமதிப்பதனால் தொழில் நுட்ப உதவிகள் அளிப்பது சிரமமான விடயமாகக் கருதப்படுகிறது.

அனேக வியாபார நிறுவனங்கள் இணையத்ததிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்வதை விட உத்தரவாதத்துடனும் தொழில் நுட்ப உதவியுடனும் ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்குவதையே விரும்புகின்றன. கோடியில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சில ஆயிரங்களை மென்பொருள்களுக்காக செலவிடுவது ஒரு பொருட்டல்ல. இதனால் பல மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஓபன்சோர்ஸ் மென்பொருள்களைப் பொதி செய்து உத்தரவாதத்துடனும் தொழில் நுட்ப உதவியுடனும் விற்பனை செய்கின்றன.

உதாரணமாக லினக்ஸின் சோர்ஸ்கோட் எப்போதும் இலவசமாகவே கிடைக்கிறது. எனினும் லினக்ஸ் இயங்கு தளத்தின் ரெட்ஹெட் பதிப்பு இலவசமாகக் கிடைப்பதில்லை. ரெட்ஹெட் நிறுவனம் அதனைப் பொதி செய்வதற்கான செலவுகளுக்கும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்குமென கட்டணம் அறவிடுகிறது. இவ்வாறு லினக்ஸ் இயங்கு தளத்தை மெருகூட்டிப் பொதி செய்து உத்தரவாதத்துடன் பல நிறுவனங்கள் பல பெயர்களில் வெளியிட்டு வருகின்றன. இதனை லினக்ஸ் டிஸ்ட்ரிபியூசன் (distributions /distros) எனப்படுகிறது

ஓபன் சோர்ஸ் மென்பொருள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

ஒரு மென்பொருளை உருவாக்கக்க் கூடிய திறன் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழுவினர் , கணினி மூலம் நமது ஏதோவொரு பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய மென்பொருளை உருவாக்க எண்ணுகிறார் / எண்ணுகின்றனர்.
அடுத்த கட்டமாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அதற்குரிய ப்ரோக்ரம் எனப்படும் ஆணைத்தொடரை கை தேர்ந்த ஒரு கணினி மொழியில் எழுத அரம்பிக்கிறார்கள். இதனை கணினி மூல நிரல் (சோர்ஸ்கோட) எனப்படும். .

பின்னர் இந்த சோர்ஸ்கோடை ஏனைய மென்பொருள் வல்லுனர்களும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அதனை இணையத்தில் அப்லோட் செய்து விடுகின்றனர். இது போன்ற பல தளங்கள் இணையத்திலுள்ளன. உதாரணமாக sourceforge.com எனும் இணைய தளத்தில் பலரும் பதிவேற்றியுள்ள ஏராளமான ஓபன்சோர்ஸ் செயற்திட்டங்களைக் காண்லாம்..

சோர்ஸ்கோடை எவரும் பெற்றுக் கொள்ளும்படி செய்த பின்னர் அத்னை மாற்றியமைக்க விரும்பும் ஒவ்வொருவருடனும் கருத்துக்கள் பரிமாறப் படும். ஒவ்வொருவரினதும் ஆணைத்தொடர்கள் பரிசோதிக்கப்படும். வழுக் கள் கண்டறியப்பட்டு நீக்கப்படும். உலகெங்குமுள்ள பல மென்பொருள் வல்லுனர்களால் அது மெருகூட்டப்பட்டு இறுதியில் முழு வடிவத்தைப் பெறுவதோடு கணினிப் பயனர்களிடம் வரவேற்பையும் பெற்றுவிடு கிறது. துரதிர்ஸ்டவசமாக சில் ஓபன் சோர்ஸ் செயற்திட்டங்கள் முன்னெ டுத்துச் செல்லப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு காணாமல் போவதுமுண்டு.

லினக்ஸ் மற்றும் அபாச்சி சேர்வர் (Apache web server) மென்பொருள் போன்ற ஓபன்சோர்ஸ் செயற்திட்டங்களில் உருவாக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார் வளர்கள பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

ஓபன்சோர்ஸ் என்பது மென்பொருள் வியாபாரிகளின் உழைப்பைச் சுரண்டும் ஒரு தந்திரமே எனும் கருத்தும் நிலவுகிறது. உலகெங்குமுள்ள மென்பொருள் விறபன்னர்களின் உழைப்பை ஊதியமே வழங்காமல் பெற்று பின்னர் அதனை வியாபாரப் பொருளாக்கி விடுகின்றனர் எனும் குற்றச் சாட்டை ஒரு சாரார் முன் வைக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும் வியாபார நோக்கில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் தமது மென்பொருள்களை யானை விலைக்கு விற்பனை செய்வதாலும் ஒரு சில நிறுவனங்கள் குறிப்பாக மைக்ரோஸொப்ட் நிறுவனம் மென்பொருள் சந்தையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முயல்வதாலும் தற்போது ஓபன் சோர்ஸ் மென்பொருள்களுக்கு ஆதரவான கோசமே உலகெங்கும் எதிரொலிக்கிறது.

– அனூப் -