Web Application என்றால் என்ன?

’வலைச்செயலி’  அல்லது ’வலைப் பயன்பாட்டு’ (Web Application / web app) என்பது ஒரு வலைச் சேவையகத்தில் (web server) இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது கணினியிலுள்ள இயங்குதளத்தால் ஆரம்பிக்கப்படும் வழமையான டெஸ்க்டொப்  செயலிகளைப் போலன்றி,  இந்த வலைச்செயலிகள் ஒரு  இணைய  உலாவியின் மூலம் (web browser).  அணுகப்படுகின்றன.


டெஸ்க்டொப் செயலிகளை விடவும் வலைச்செயலிகள்  பல அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. வலைச்செயலிகள் ஒரு இணைய உலாவியினுள்ளேயே இயங்குவதால், வெப் டெவலப்பர்கள் (Web Developers) வெவ்வேறு கணினி  இயங்கு தளங்களுக்கு ஏற்றவாறு  வலைச்செயலிகளை  உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

எடுத்துக்காட்டாக, Google Chrome இணைய உலாவியில்  இயங்கும் ஒரு வலைச் செயலி விண்டோஸ் மேக் (Mac OS), மற்றும் உபண்டு (Ubuntu)  என எந்த இயங்கு தளத்திலும்  செயற்படும். மேலும் ஒரு வலைச் செயலி மேன்படுத்தப்பட்டவுடன்  பயனர்களுக்கு  டெஸ்க்டொப் மென்பொருள் போன்று மேன்படுத்தப்பட்ட பதிப்புகளை விநியோகிக்க வேண்டிய அவசியமில்லை.

வலைச் சேவையகத்தில்  செயலியை  மேம்படுத்துவதன் மூலம்  எல்லா பயனர்களும் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (updated version) அணுகலாம். ஒரு பயனர் நிலைப்பாட்டில் இருந்து நோக்கும்போது, ஒரு வலைச் செயலியானது, வெவ்வேறு இடைமுகப்புகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களில் ஒரு நிலையான  இடை முகப்பை வழங்குகிறது. ஏனெனில் அவற்றின் தோற்றமானது இயங்கு தளத்திற்கு  மாறாக இணைய உலாவியிலேயே சார்ந்துள்ளது.

மேலும், நீங்கள் ஒரு வலைச்செயலியில்  உள்ளீடு செய்யும்  தரவுகள் தொலைவிலுள்ள ஒரு சேர்வர் கணினியின் மூலமாகவே முறைவழிப்படுத்தப்பட்டு (process) சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோப்புக்களை (files) வெவ்வேறு  கணினிகளுக்கு இடையில் மாற்ற வேண்டிய  தேவை  ஏற்படாததோடு டெஸ்க்டொப் கணினி, மடிக்கணினி, டேப்லட் பீசி, கையடக்கத் தொலைபேசி போன்ற பல்வேறு சாதனங்களிலிருந்து ஒரே தரவுகளை அணுகக் கூடிய வசதியும் கிடைக்கிறது.

இவ்வாறு வலைச் செயலிகள்  ஏராளமான  வசதிகளைக் கொண்டிருந்தாலும் அவை டெஸ்க்டாப் செயலிகளுடன்  ஒப்பிடும்போது சில குறைபாடுகளையும்  கொண்டிருப்பதை காணலாம்.

வலைச் செயலிகள் கணினி இயங்கு தளத்தினூடாக (OS) நேரடியாக இயங்காததால், அவை CPU, நினைவகம் மற்றும் கோப்பு முகாமை போன்ற சில கணினி வளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலையே கொண்டிருக்கின்றன.

எனவே, அதிக செயற்திறன் அவசியமான, வீடியோ எடிட்டிங், எனிமேஷன்  மற்றும் பல்லூடக பயன்பாடுகள் வலைச் செயலிகளை விடவும் பொதுவாக டெஸ்க்டொப் செயலிகளிலேயே சிறப்பாக செயல்படுகின்றன. எனினும் வலைச் செயலிகள் முற்றிலும் வலைச் சேவையகத்திலும் இணைய உலாவியிலுமே  சார்ந்துள்ளன.
ஒரு வலைச்செயலியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது  உங்கள்  இணைய உலாவி செயற்பட மறுத்தால் ,நீங்கள் அதுவரை பணியாற்றிய  சேமிக்கப்படாத பகுதிகளை  இழக்க நேரிடலாம்.



மேலும் , இணைய உலாவியில் மேம்படுத்தல்கள் (updates) நிகழும் போது, சில வேளைகளில் வலைச் செயலியிற்கு ஆதரவளிக்காத நிலைகளும் ஏற்பட இடமுண்டு.  இதன் காரணமாக ஒரு சாரார் டெஸ்க்டொப் செயலிகளையே அதிகம் விரும்புகின்றனர்.

பல மென்பொருள் தயாரிப்பு  நிறுவனங்கள் தற்போது தமது மென்பொருள்களை  டெஸ்க்டாப் பதிப்பு  மற்றும் வலைப்பதிப்பு (web version)  என  இரண்டு  வடிவங்களிலும் வழங்குகின்றன. இதற்குப் பொதுவான எடுத்துக்காட்டாக Microsoft Office மென்பொருள் பொதியைக் குறிப்பிடலாம். Microsoft Office மென்பொருளின் இணைய பதிப்பாக  Microsoft Office 365 செயற்பட்டு வருகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இணைய பதிப்பில் சேமிக்கப்படும் கோப்புகளை டெஸ்க்டொப் பதிப்பிலும், டெஸ்க்டாப் பதிப்பில் உருவாக்கப்பட்ட கோப்புக்களை வலைச்செயலியினூடாகவும் அணுகித்  திறந்து பணியாற்றக் கூடியவாறு இரண்டு பதிப்புகளும்  ஒன்றோடொன்று இணங்கிச் செல்லுமாறும் உருவாக்கப்படுகின்றன.