Arattai-Instant Messaging app from India


Arattai-Instant Messaging app from India சோஹோ (Zoho), மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்சப் மற்றும் டெலிக்ராம் செயலிகளுக்கு இணையான(?) மெஸ்ஸேஜிங் பயன்பாட்டை அரட்டை   எனும் பெயரில்  இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரட்டை என்பது தமிழ் சொல்லானாலும் தமிழ் மொழி அறியாதவர்கள் எல்லாம் அதனை ஆங்கில மயப்படுத்தி சண்ட பிச்சாய் (சுந்தர் பிச்சை Sunder Pichai) ) போல் எரட்டாய் என்றே உச்சரிக்கப் போகிறார்கள்)

சோஹோவின் அரட்டய் செயலி கூகுள் ப்லே மற்றும் App ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில நாட்களில் ப்லே ஸ்டோரில் மாத்திரம், 50,000 பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது அரட்டை.

சோஹோ கார்ப்பரேஷன், சென்னையை தலைமையகமாக்  கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இது ஸ்ரீதர் வேம்பு எனும் தமிழரால் 1996 இல் நிறுவப்பட்டது.

தற்போது ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு அருகாமையில் உள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீதர் வேம்பு இந்திய அரசின் அதி உயர் விருதான பத்மஸ்ரீ விருது பெறுவதாக கடந்த ஜனவர் 26, 2021 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

வணிக மென்பொருள்களை உருவாக்குவதில்  சோஹோ நிறுவனம் பிரபல்யம் பெற்றுள்ளது. அது தற்போது துரித செய்தியிடல் (instant messaging platform) தளத்தில் தடம் பதிக்கிறது.

அரட்டை இலவசமான ஒரு செயலி. விளம்பர தொல்லைகள் எல்லாம் அரட்டையில் இல்லை. அரட்டை கணக்கை உருவாக்க தொலைபேசி எண், சுயவிவரப் பெயர், முகவரி, தரவு பயன்பாடு மற்றும் பிற விருப்பத் தகவல் போன்ற தகவல்களை வழங்குமாறு அரட்டை கேட்கிறது.

அரட்டை செயலி இப்போதுதான் அறிமுகமானாலும் வாட்சப் போன்றே பல வசதிகளைக் கொண்டுள்ளது. ஆடியோ அழைப்பு, வீடியோ அழைப்பு, அரட்டைகள், குழு அரட்டைகள், ரகசிய அரட்டை, கோப்பு பகிர்வு மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வசதியும் கூடுதலாக வசதியும் அரட்டையில் அடங்குகிறது.

வாட்சப்பில் இல்லாத சில வசதிகளும் இருக்கின்றன. அவற்றுள் பலரும் விரும்பும் அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியும் அடக்கம்.

சேகரிக்கும் தகவல்களை பயனருக்குத் தெரியாமல்  எந்த மூன்றாம் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்ளாது என்றும் பயனர் தரவுகளை வணிக நோக்கில் பயன் படுத்த மாட்டாது என்றும் வாடிக்கையாளர் தனியுரிமைக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் உறுதியளிக்கிறது அரட்டை நிர்வாகம்.

Arattai-Instant Messaging app from India

Google Play

Zoho.com