Sri Lanka to digitalize all TV channels in 2023


டிஜிட்டல் மயமாகும் இலங்கையின் தொலைக்காட்சிச் சேனல்கள்



தற்போதைய அனலாக் (analog) தொலைக்காட்சி ஒளிபரப்பு முறையை டிஜிட்டல் (digital) முறையாக மாற்றியமைத்து, அனைத்து இலங்கையர்களுக்கும் மிகத் தெளிவான தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை வழங்க விருக்கிறது

இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஊடக அமைச்சினால் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் படி 2023 ஆம் ஆண்டில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பைத் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இத்திட்டம் 2025 ஆம் ஆண்டளவில் நிறைவடையும்.

DTTB (Digital Terrestrial Television Broadcast) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து (Lotus Tower) டிஜிட்டல் வடிவில் ஒளிபரப்பப்படவிருக்கிறது.

உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான டயலாக் டிவி, டிஸ் டிவி, பியோ டிவி (Peo TV) அனைத்தும் டிஜிட்டல் தொலைக் காட்சி சேவைகளையே வழங்குகின்றன. ஆனால் அவை தரை வழியில் (Terrestriaவருவதிலை.

டயலாக் மற்றும் டிஸ் டிவி சேட்டலைட் ஊடாக வரும் சிக்னலை டிஸ் அண்டெனா பொருத்தி எமது தொலைக் காட்சியில் பெறுகிறோம்.

அதேவேளை பியோ டிவி (ஐபிடிவி) இண்டர்நெட் ஊடாக வருகிறது.

ஆனால் வரவிருக்கும் டிஜிட்டல் டிவி வழமை போன்று தரை வழியாகாவே (Terrestriaவரும்.

ஆனால் டிஜிட்டல் ஃபார்மட்டில் வரும்.

இலங்கையில் தொலைக்காட்சி ஒலிபரப்பின் வரலாறு 1979 இல் இலங்கை முதன் முதலில் ஐடிஎன் (ITN) தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கிறது.

தற்போது சாதாரண அண்டெனா பொருத்தி நாம் பார்த்து வரும் உள்நாட்டு தொலைக் காட்சிச் சேனல்கள் அனைத்தும் அனலோக் வடிவிலேயே கிடைக்கப் பெறுகின்றன.

அப்போது அனலோக் முறையே புழக்கத்தில் இருந்தது. பின்னர் காலப் போக்கில் பல வளர்ச்சியடைந்த நாடுகள் டிஜிட்டல் முறைக்கு மாறின.

தொலைக் காட்சி சேவைகளில் டிஜிட்டல் முறை தோன்றி சுமார் 20 வருடங்களுக்கு மேலாகின்றன. ஆனால் இப்போதுதான் இலங்கை டிஜிட்டல் முறைக்கு மாற ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் தொலைக்காட்சி முறை ஜப்பானின் ISDB-T (Integrated Services Digital Broadcasting-Terrestrial) நியமத்தைப் பின்பற்ற விருக்கிறது.

எனினும் இலங்கையில் தற்போது கிடைக்கும் பெரும்பாலான டிஜிட்டல் தொலைக்காட்சி பெட்டிகள் ISDB-T நியதியை ஆதரிக்கவில்லை.

எனவே 2023 இல் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைகள் தொடங்கப்படுவதால், எதிர்காலத்தில் நாட்டிற்குள் டிவிகளை இறக்குமதி செய்யும்போது ISDB-T அமைப்பை ஆதரிக்கும் தொலைக்காட்சி பெட்டிகளையே இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

இருந்தாலும் டிஜிட்டல் தொலைக் காட்சிப் பெட்டியின்றி அதற்கான  STB -Set-Top-Box (செட்-டாப் -பாக்ஸ்) ஐப் பயன் படுத்தி டிஜிட்டல் சேவைகளைக் பார்க்க முடியும்.

இந்த STB ஐ வாங்குவதற்கு ரூபா 3000 -4000 அளவில்  செலவிட வேண்டியிருக்கும். எனினும் மாதாந்தக் கட்டணம் எதுவும் செலுத்தாமல் அனைத்து உள்நாட்டு தொலைக் காட்சிகளையும் இலவசமாகவே கண்டு களிக்கலாம்.

இந்த STB ஐ கேபிள்மூலம் உங்கள் டிவியுடன் இணைக்க வேண்டும்.

இது போன்ற STB கள் Dialog TV மற்றும் PEO TV போன்ற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.

எனினும் உங்கள் டிவி டிஜிட்டல் ஒளிபரப்பை ஆதரிக்குமானால் இடையில் ஒரு செட்-டாப்-பாக்ஸ் அவசியமில்லை.

ஆனால் டிஜிட்டல் டிவி சிக்னலைப் பெற ஆண்டெனாவின் சிக்னல் தரத்தைச் சரிபார்த்து அதை சரியாக நிறுவ வேண்டும். இது ஒரு எளிய பணிதான்.

பின்னர் STB செட் டாப் பாக்ஸஸில் சேனல்களை டியூன் செய்யலாம்.

டிஜிட்டல் முறைக்கு மாறினாலும் அனலாக் முறை உடனடியாகக் கைவிடப் படமாட்டாது. சில வருடங்களுக்கு அனலோக் முறையும் தொடரும்.

DTTB திட்டத்தில் பல வசதிகள் உள்ளன.

மொபைல் ஃபோன்களிலும் டிஜிட்டல் ஒளிபரப்பைக் காண முடியும் என்பது மிக முக்கியமான வசதி. டிவி இல்லாதவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

இது தவிர மேலும் பல வசதிகள கீழே பட்டியலிடப்படுகின்றன.

  • ஒவ்வொரு டிவி சேனலையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடிவதுடன் உயர்ந்த ஒலித் தரத்தையும் கொண்டிருக்கும்.
  • தற்போதைய அனலாக் முறையில் இருப்பது போல் புள்ளிகள் தோன்றாது.
  • அதிக தெளிவுடன் கூடிய HD சேனல்களைப் பார்க்கலாம். அனலாக் முறையில் HD சேனல்களை பார்க்க முடியாது
  • சேனலுக்குச் சேனல் ஆன்டெனாவை சுழற்ற வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண ஆண்டெனா மூலம் ஒரே திசையில் அனைத்து சேனல்களையும் பெற முடியும்.
  • புதிதாக இன்னும் ஏராளமான சேனல்களை ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்பு
  • பல சேனல்களை ஒரே அலைவரிசையில் பார்க்கலாம்.
  • சேட்டலைட் சேனல்களைப் போல் மழைக்காலங்களில் தடங்கள் ஏற்படாது.
  • டிவி சேனல்கள் மட்டுமன்றி ரேடியோ சேனல்களையும் டிஜிட்டல் வடிவில் வழங்கலாம்
  • சந்தாதாரர்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க முடியும்.
  • தொலைக் காட்சியில் டெக்ஸ்ட் வடிவில் தகவல்களை வழங்குவது சாத்தியம்.
  • நிகழ்ச்சி நிரல் வழிகாட்டிகள், வாநிலை அறிக்கை, பேரிடர் பற்றிய எச்சக்கைகள் போன்ற தகவல்கலை எளிதாக வழங்க முடியும்.