What is Virtual Memory?



வேர்ச்சுவல் மெமரி என்றால்  என்ன?

டெஸ்க்டொப் கணினி இயங்கு தளங்களில் (Operating System) வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) என்பது ஒரு இன்றியமையாத அங்கமாயுள்ளது. பொதுவாக டெஸ்க்டொப் கணினிகளில் நினைவகத்தின் (RAM) அளவு 64 முதல் 128 எம்.பீ வரை காணப்படுகிறது. எனினும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களைத் திறந்து பணியாற்ற இந்த நினை வகத்தின் கொள்ளளவு போதியதாக இருப்பதில்லை. (இப்போது 2 ஜீபீ, 4 ஜீபீ அளவுகளிலெல்லாம் நினைவகம் கிடைப்பது உண்மைதான். இருந்தாலும் பரவலாகப் பாவனையிலிருப்பது 128 எம்.பீ அளவில்தான்)

உதாராணமாக விண்டோஸ் எக்ஸ்.பீ இயங்கு தளத்தில் ஒரு இமெயில் க்லையன்ட், வெப் பிரவுசர், வேர்ட் ப்ரொஸெஸ்ஸர் என ஒரே நேரத்தில் திறந்து கெண்டால் 64 எம்.பீ கொள்ளளவு கொண்ட நினைவகத்தால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. வேர்ச்சுவல் மெமரி என ஒரு சமாச்சாரம் இல்லையானால் முதலில் திறந்த எப்லிகேசனை மூடிய பிறகே புதிதாக ஒரு எப்லிகேசனைத் திறக்க அனுமதித் திருக்கும் விண்டோஸ். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.

வேர்ச்சுவல் மெமரி என்பது ஒரு கற்பனை நினைவகம். Virtual என்பதன் பொருள் இல்லாத ஒன்றை இருப்பதாகக் எண்ணிக் கொள்வதாகும். வேர்ச்சுவல் மெமரியின் செயற்பாட்டை விளக்குவதானால், பிரதான நினைவகமான ரேம்மில் ஏற்றப்பட்டும் CPU வினால் தற்போது பயன்படுத்தப் படாமலிருக்கும் டேட்டாவை, இயங்குதளம் ஹாட் டிஸ்கில் தற்காலிகமாக சேமித்து விடும். இதன் மூலம் புதிய எப்லிகேசனைத் திறப்பதற்கு ஏதுவாக ரேம்மில் இடம் கிடைக்கிறது. இந்த செயற்பாடு எங்களை அறியாமலேயே நடந்து விடுகிறது. இதன் மூலம் கணினியில் ரேம்மின் அளவு 32 எம்.பீயே இருந்தாலும் நினைவகத்தில் தாராளமாக இடம் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம்.

ரேம்மிலுள்ள டேட்டாவை ஹாட் டிஸ்கில் பதியப்படும் இடத்தை (page file) பேஜ் பைல் எனப்படுBறது. நினைவகத்தில் பயன்படுத்தப்படாது இருக்கும் பகுதிகளை ஹாட் டிஸ்கில் பதிந்து விடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். வேர்ச்சுவல் மெமரியை பேஜ் பைல், Swap file எனவும் அழைக்கப்படும். விண்டோஸில் பேஜ் பைலுக்குரிய எக்ஸ்டென்சன் .swp எனக் கொண்டிருக்கும். இயங்கு தளம் ரேம்மிலிருந்து பேஜ் பைல் பேஜ் பைலிலிருந்து ரேம், என மாற்றி மாற்றி டேட்டாவை நகர்த்தி சேமித்துக் கொண்டேயிருக்கும்

இருந்தாலும் ஹாட் டிஸ்கின் படிக்கும் பதியும் வேகம் ( read / write speed) ரேம்மின் வேகத்துடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைவானது. அத்துடன் ஹாட் டிஸ்கில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் சீபீயுவினால் தேவைப்படும் டேட்டாவை உடனடியாக அணுகிப் பெறக் கூடியதாக இல்லை.

அதனால் கணினி வேர்ச்சுவல் மெமரியிலேயே அதிகம் தங்கியிருக் குமானால் கணினியின் இயக்கத்தில் வேகம் குறைவதை உணரலாம். ரேம்மின் கொள்ளளவு குறைவாக இருக்கும்போது இயங்கு தளம் ரேம்மிற்கும் ஹாட் டிஸ்கிற்கும் இடையில் தொடர்ச்சியாக மாறி மாறி டேட்டாவை மாற்ற வேண்டியிருக்கும். இதனால் கணினி மிக மிக மெதுவாகாவே இயங்கும்.

ஒரே நேரத்தில் பல எப்லிகேசன்களை இயக்க வேண்டுமானால் அதிக கொள்ளளவு கொண்ட ரேம்மை னிறுவுவதனால் இக் குறை பாட்டை நிவர்த்தி செய்யலாம். உங்கள் வேலைகளுக்கேற்ற போதிய ரேம் இருக்கும் போது வேர்ச்சுவல் மெமரியும் சிறப்பாக இயங்கும்.

பேஜ் பைலின் அளவு பிரதான நினைவகமான ரேம்மமின் அளவின் 1.5 மடங்காக விண்டோஸ் டிபோல்டாக நிர்ணயித்துக் கொள்ளும். ரேம்மின் கொள்ளளவினதும் பேஜ் பைலின் அளவினகும் கூட்டுத்தொகை வேர்ச்சு வல் மெமரியின் அளவைத் தரும். உதாரணமாக ரேம்மின் அளவு 512 எம்.பீ எனின் பேஜ் பைல் 768 எம்.பீ யாக இருக்கும். அதாவது கணினியில் நினைவகம் 512 எம்.பீ Physical memory யையும் 768 எம்.பீ Virtual Memory ஐயும் கொண்டிருக்கும்.

விண்டோஸில் டாஸ்க் மேனேஜரை அழைத்தால் விண்டோஸில் இயக்கத்திலிருக்கும் ஒவ்வொரு எப்லிகேசனும் எடுத்துக் கொள்ளும் வேர்ச்சுவல் மெமரியின் அளவை அறிந்து கொள்ளலாம். Control-Alt-Delete விசைகளை அல்லது Control-Shift -Escape விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் டாஸ்க் மேனேஜரை வர வைக்கலாம்.

சில வேளை டாஸ்க் மெனேஜரில் மெனு பார் இல்லையானால் அதன் மேல் இரட்டைக் க்ளிக் செய்வதன் மூலம் தெரிய வைக்கலாம். பின்னர் அங்கு Process டேபில் க்ளிக் செய்ய தற்போது செயற்பாட்டுக்குட்படுத்தப் பட்டிருக்கும் பைல்களின் விவரங்களை அறியலாம். இங்கு வேர்ச்சுவல் மெமரியின் அளவைத் தெரிந்து கொள்ள View மெனுவில் Select columns தெரிவு செய்யுங்கள். பிறகு வரும் டயலொக் பொக்ஸில் Virtual memory size என்பதைத் தெரிவு செய்ய இப்போது Process டேபில் VM size என வேர்ச்சுவல் மெமரியின் அளவுகளைக் காணலாம். இங்கு VM size column என்பதன் தலைப்பில் இரட்டைக் க்ளிக் செய்ய வேர்ச்சுவல் மெமரியின் அளவுகளை ஏறு வரிசையில் காணலாம்.

ஒரே நேரத்தில் பல எப்லிகேசன்களைத் திறந்து பணியாற்றும்போது வேர்ச்சுவல் மெமெரியின் அள்வு மிகக் குறைவாகவுள்ளது என விண்டோஸ் ஒரு செய்தியை Notification Area வில் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்த செய்தி அடிக்கடி தொடருமானால் வேர்ச்சுவல் மெமரியின் அளவைக் கூட்டிக் கொள்ளுங்கள். ஆனால் வேர்ச்சுவல் மெமரியின் அளவை அதிகரிப்பதை விட பிஸிக்கல் மெமரி யின் அளவை அதிகரிப்பது அதாவது ரேம்மின் அளவைக் கூட்டிக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.

வேர்ச்சுவல் மெமரியின் அளவை அதிகரிக்கப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

மை கம்பியூட்டர் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Properties தெரிவு செய்யவும். அப்போது வரும் System Properties டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்து Performance என்பதன் கீழ் Settings பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் Performance Options டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். பின்னர் வரும் டயலொக் பொக்ஸில் Virtual Memory யின் கீழ் Change பட்டனில் க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸிலிருந்து வேர்ச்சுவல் மெமரியின் அளவை மாற்றிக் கொள்ளலாம். (இந்த இடத்துக்கு வந்து சேர பல வழிகளுள்ளன)

நீங்கள் இயக்க விரும்பும் எப்லிகேசான் அதிக நினைவகத்தை எடுத்துக் கொள்ளுமானால் அதுவும் அந்த எப்லிகேசனை அடிக்கடி பயன்படுத்து வதானால் மட்டும் வேர்ச்சுவல் மெமரியின் அளவை கூட்டிக் கொள்ளுங்கள். எனினும் அந்த வேலையை இயங்கு தளமே பார்த்துக் கொள்ளும் வண்ணம் System managed size என்பதைத் தெEவு செய்தல் நல்லது. அப்போது தேவைப்படும்போது மட்டும் வேர்ச்சுவல் மெமரியின் அளவை இயங்கு தளமே அதிகரித்துக் கொள்ளும்.

வெர்ச்சுவல் மெமரியின் அளவைக் கூட்டும்போது போது சில வேளை டேட்டா இழப்புகளையும் சந்திக்க நேரிடும். அதனால் வேர்ச்சுவல் மெமரியின் அளவை நீங்களாக மாற்றாமலிருப்பதே நல்லது. இருந்தாலும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட திருப்தியில் இழப்புகளைIட்டு மனம் கவலை கொள்ளாது.

-அனூப்-