What is Clubhouse? கிளப்ஹவுஸ் என்றால் என்ன?
What is ClubHouse? கிளப்ஹவுஸ் என்பது தற்போது அதிகமாகப் பேசப்படும் ஒரு சமூக ஊடக செயலி. ஆனால் இது ஃபேஸ்புக், ட்விட்டர் போலல்லாது ஆடியோவை மட்டுமே ஆதரிக்கிறது. அதாவது இங்கு உரையாடல்கள் / அரட்டைகள் ஆடியோ வடிவில் மட்டுமே இடம் பெறுகின்றன.
Clubhouse?கிளப்ஹவுஸ், என்பது கடந்த வருடம் (2020) ஏப்ரல் மாதத்தில் iOS ற்காக மட்டுமென வெளியிடப்பட்ட ஒரு செயலி. இதனை Paul Davison மற்றும் Rohan Seth ஆகிய இருவரும் சேர்ந்து Alpha Exploration Co நிறுவனத்தை ஆரம்பித்து உருவாக்கினர்.
கடந்த மே மாதம் Android சாதனங்களுக்கெனவும் கிளப்ஹவுஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவில் மட்டுமே கிள்ப்ஹவுஸின் பீட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் அதனை மற்ற உலகின் பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தற்போது இலங்கையிலும் பிலேஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்ய முடியுமாக இருக்கிறது.
கிளப்ஹவுஸில் பயனர்கள் பல்வேறு உரையாடல்கள், நேர்காணல்களைக் கேட்பதன் மூலமோ அல்லது நடாத்துவதன் மூலமோ பங்கேற்கலாம். கிளப் ஹவுஸில் இவ்வாறான உரையாடல் இடம் பெறும் இடங்கள் அறைகள் (rooms) என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால் அந்த உரையாடல்கள் ஆடியோவடிவில் மட்டும் உள்ளன. இது தொலைபேசியில் பயன் படுத்தும் ஒரு கான்ஃபரன்ஸ் அழைப்பு போன்றது. கிளப் ஹவுஸ் அறையொன்றில் அடுத்தவர்கள் பேசும்போது எங்களால் கேட்க முடியும். ஒரு தொலைபேசி அழைப்பைப் போல, அந்த உரையாடல் முடிந்ததும், அந்த அறை மூடப்படும். அந்த உரையாடலை மீண்டும் கேட்க விரும்பினால், அதை வேறு வழியில் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே கிளப் ஹவுஸில் இணைந்துள்ள ஒருவரின் அழைப்பின் மூலமே கிளப் ஹவுஸில் இணைய முடியும். அதாவது நீங்கள் இந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து ஒரு கணக்கை உருவாக்கி கிளப் ஹவுஸ் உரையாடல்களைக் கேட்க முடியாது.
ஒரு காலத்தில் ஜிமெயில் கணக்கு கூட இது போன்ற அழைப்பு லின்க் மூலம் மட்டுமே உருவாக்க கூகுல் அனுமதித்ததை அந்தக் கால இணைய வாசிகளுக்கு நினைவில் இருக்கும்.
இணைப்பாக (link) வரும் அழைப்பு மூலம் நீங்கள் உள்நுழையலாம். மேலும், ஒவொரு கிளப்ஹவுஸ் உறுப்பினர்களுக்கும் 2 அழைப்புக்களை (Invitations) மட்டுமே அனுப்ப முடியும்.
யாராவது ஒரு கிளப் ஹவுஸ் அங்கத்தவர் ஒரு நிகழ்வைத் திட்டமிட்டு அந்த நிகழ்வில் சேர்ந்தால், காத்திருப்பு பட்டியல் அல்லது அழைப்பு இல்லாமல் நேரடியாக ஒரு கணக்கை உருவாக்கவும் முடியும்.
கிளப்ஹவுஸில் இணைந்த பிறகு நீங்கள் விரும்பும் உரையாடல் தலைப்புகளைத் தேர்வுசெய்து அவற்றுடன் தொடர்புடைய உரையாடல்களைக் கேட்கலாம் அல்லது உரையாடலைத் தொடங்கலாம். மற்ற சமூக ஊடகங்களைப் போலவே, நீங்கள் தேடும் உரையாடல்களின் அடிப்படையில் இதுபோன்ற பிற அறைகளையும் அது பரிந்துரைக்கிறது. பொதுவான அறை, தனிப்பட்ட அறை மற்றும் சமூக அறை என பல வகையான அறைகள் அங்கு உள்ளன.
ஒவ்வொரு அறையிலும் மேடை (Stage) உள்ளது. மேடையில் உள்ளவர்கள்தான் மற்றவர்களிடம் பேச முடியும். அவர்கள் பேசுவதைக் அடுத்தவர்கள் கேட்டுக் கொண்டிருக்க முடியும். நீங்களும் பேச விரும்பினால் கையை உயர்த்திக் காண்பிக்கும் (emoji மூலம்) மேடைக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று சொல்லலாம்.
ஒரு அறையில் நுழைந்ததும் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு அறையில் பேசப்படும் விடயத்தை நீங்கள் விரும்பாவிட்டால் அவர்களுக்குச் தெரியாமலேயே வெளியேறலாம்.
சென்ற ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளப் ஹவுஸ் இன்னும் பீட்டா கட்டத்தில் இருப்பதனாலேயே இந்த அழைப்பு முறை தொடர்கிறது, பீட்டா கட்டம் முடிந்த பின்னர் உலகம் முழுவதும் அழைப்பு ஏதுமின்றி எவரும் இணையலாம்.
தனித்துவமான மாதிரியின் காரணமாக குறுகிய காலத்தில் கிளப்ஹவுஸ் பிரபல்யமடைந்துள்ளது.
கிளப் ஹவுஸின் வரவேற்பைப் பார்த்த சமூக ஊடக நிறுவங்களும் கிளப்ஹவுஸைப் போன்று ஆடியோ உரையாடல் சேவைகளை ஆரம்பிக்கவிருக்கின்றன. ட்விட்டர் ஏற்கனவே ட்விட்டர் ஸ்பேஸ் சேவையை ஆரம்பித்துள்ளது. பேஸ்புக் ஆடியோ போட்காஸ்ட் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. ட்விட்டர் ஸ்பேஸ் கூட பயனர்களிடையே மிகவும் பிரபலமான பயன்பாடாக மாறியுள்ளது.
சமீபத்திய ஆண்ட்ராய்டு செயலியின் வெளியீட்டிற்குப் பிறகு, கிளப்ஹவுஸில் அதிகமான பயனர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அதன் சேவையகங்கள் (servers) அதிக சுமையைத் தாங்கக் கூடியவையாக இருக்கவில்லை. எனவே கிளப் ஹவுஸ் நிறுவனம் தற்போது தேவையான உள்கட்டமைப்பை விஸ்தரித்து வருகிறது.
உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், கிளப்ஹவுஸிற்கென அதிகாரப்பூர்வ லோகோ ஐகான் இதுவரை வெளியிடப்படவில்லை. கிளப் ஹவுஸ் பயனர்களின் ப்ரொஃபைல் படங்களையே அவ்வப்போது மாற்றி லோகோவாகப் பயன் படுத்தி வருகிறார்கள். மேலும், அதன் அதிகாரபூர்வ இணைய தளம் கூட முழுமையாக வடிவமைப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Android
https://play.google.com/store/apps/details...
iOS
https://apps.apple.com/.../clubhouse-drop-in.../id1503133294