How is Sri Lanka connected to the Internet?

 

How is Sri Lanka connected to the Internet? உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு  டிஜிட்டல் வடிவில் தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு பாதையாகவே இணையம் அறியப்படுகிறது.

நாட்டுக்கு நாடு, கண்டத்திற்குக் கண்டம் வியாபித்திருக்கும் உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பான இந்த இண்டர்நெட் அதிக வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்யக் கூடிய கேபல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை Internet Backbone எனப்படுகிறது. இணையத்தின் முதுகெழும்பாகச் செயற்படும் இந்தக் கேபலுடன் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

How is Sri Lanka connected to the Internet?

இலங்கை  கடலினால் சூழப்பட்டுள்ள ஒரு தீவாக இருப்பதனால்  கடலின் கீழ்  அமைக்கப்பட்டுள்ள  கேபல்களால் உலகின் பிற நாடுகளுடன் இணைக்கப்பட்டு  இணையத்துடன் தொடர்பு கொள்கிறது.   இந்தக் கேபல் (submarine cable) கடல் வழி கேபல்  / கடற் கீழ் கேபல்  / நீர்மூழ்கிக் கேபல் எனப் பலவாறு அழைக்கப்படுகிறது.

இலங்கையை இணையத்துடன் இணையும் மிகப் பெரிய கேபிள் அமைப்பாக SEA-ME-WE (சீ-மீ-வீ) கருதப்படுகிறது.  SEA -ME -WE என்பது தென்கிழக்கு ஆசியா - மத்திய கிழக்கு நாடுகள் - மேற்கு ஐரோப்பா (South-East Asia - Middle East - Western Europe)  நாடுகளை இணைக்கும் கேபல்  தொகுதியாகும். இங்கு SEA என்பது கடலைக் குறிக்கவில்லை.

Submarine cable Map https://www.submarinecablemap.com/

SEA-ME-WE (சீ-மீ-வீ) கேபல் அமைப்பு பிரான்சிலிருந்து சிங்கப்பூர் வரை செல்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒரு நிறுவனம் (இலங்கையில் SLT நிறுவனம்)  இந்தக் கேபல்களில் முதலீடு செய்கிறது. முதலீட்டின் அளவுக்கேற்ப அந்த நாட்டுக்குரிய கேபல் அமைப்பின் திறன் தீர்மானிக்கப்படுகிறது.  தற்போது  கடலின் கீழ் ஐந்து SEA-ME-WE கேபிள் அமைப்புகள் உள்ளன. ஐந்திலும் இலங்கை இணைந்துள்ளது.

How is Sri Lanka connected to the Internet?

இலங்கைக்கான முதல் கடல் வழி கேபிள் SEA-ME-WE 1 ஆகும். இது 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சீ-மீ-வீ 1 கடல் வழி  கேபல்கள் (copper)  செப்புக் கம்பியினாலானவை.  இந்தக் கேபலின் அளவு சுமார் ஒரு  அடி விட்டம் கொண்டவையாக இருந்தன. இலங்கைக்கான உரிமையை SLT நிறுவனம் வைத்திருந்ததுடன் கொழும்பில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையுடன் கரையை அடைந்தது.

எனினும் பிந்திய காலத்தில் இதன்  திறன் போதுமானதாக இருக்காததால் சிறிது காலத்தின் பின்னர் சீ-மீ-வீ நாடுகள் ஒன்றிணைந்து  1994 ஆம் ஆண்டில் SEA-ME-WE 2 எனும் கேபல் அமைப்பை உருவாக்கின.

How Sri Lanka is connected to the Internet? தற்போது இலங்கைக்கான  கடல் வழி கேபல் அமைப்புகள் ஆறு மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுள்  ஐந்தின் இலங்கைக்கான உரிமையை  SLT நிறுவனமும்   ஒன்றை  டயலோக் நிறுவனமும்   வைத்திருக்கிறது.

SEA-ME-WE 2 கடல் வழி கேபல்கள் ஒரு ஃபைபர் ஆப்டிக்ஸ்  (fiber optics) கேபல் அமைப்பு. ஃபைபர் ஆப்டிக்ஸ்   கேபலில் கம்பிகளுக்குப் பதிலாக  மிக மெல்லிய கண்ணாடி நார்கள்  பயன் படுத்தப்படுகின்றன. இவை ஒளி (light) வடிவிலேயே தரவைக் கடத்துகின்றன. அதனால் தரவுப் பரிமாற்றம் மிக வேகமாக நடை பெறுகிறது.  செப்புக் கம்பிகளால் இந்த வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்ய முடியாது.  எனவே காலப்போக்கில் கடல் வழி கேபல்கள் அனைத்தும் ஃபைபருக்கு மாறியது. பழைய செப்புக் கேபிள் கடலிலேயே  கை  விடப்பட்டது.

How is Sri Lanka connected to the Internet?

உலகின் 98 சத வீததிற்கும் அதிகமான இணைய போக்குவரத்து ஃபைபர் ஆப்டிக் கேபல்களையே நம்பியுள்ளது. இணைய போக்குவரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே செயற்கைக்கோள்கள் வழியாக நடைபெறுகிறது.

SEA-ME-WE 2 கடல் வழி கேபல்கள் ஒருங்கிணைந்த திறன் கொண்ட இரண்டு ஒற்றை-முறை-ஃபைபர் ஆப்டிக் கேபல் ஜோடியை கொண்டிருந்தது. இது 18,751 km கிலோ மீட்டர் நீளமானது. இதன் வேகம் 1.12 Gbit/s ஆகும். இதுவும் கொழும்பிலுள்ள  கட்டுப்பாட்டு அறையியுடனேயே இணைக்கப்பட்டுள்ளது. எனினும் அதிக பாராமரிப்புச் செலவு மற்றும் போதிய வேகமின்மை காரணமாக SEA-ME-WE 1 மற்றும் 2 கேபல்  இணைப்புகள் பின்னர் கை விடப்பட்டுகின்றன.

இலங்கையில் இண்டர்நெட் 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2000 மாம் ஆண்டில் SEA-ME-WE 3 எனும் கடல் வழி கேபல் அமைக்கப்படுகிறது. இது 39,000 கிலோ மீட்டர் நீளமானது. 4.6 Tbit/s (2015 இலங்கைக்கன  உரிமையை SLT நிறுவனமே கொண்டுள்ளது. இலங்கையில் இதன் தரை நிலையம் கல்கிசையில் உள்ளது. இதுவும் பழைய கேபல் தொகுதி  என்பதால், இதன்  செயல்பாடுகளை விரைவில்  நிறுத்தப்படவிருக்கிறது.

SEA-ME-WE 4 கடல் வழி கேபல் 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.  இது 18,800 கிலோ மீட்டர் நீளமானது. இலங்கையில் இது கொழும்பில் கரையை அடைகிறது.  இலங்கைக்கன  உரிமையை SLT நிறுவனமே கொண்டுள்ளது.

SEA-ME-WE 5- இது 2016 ஆம் ஆண்டு இடைப்பட்ட கடல் வழி கேபல் அமைப்பு 20000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இது முன்னைய அனைத்தையும் விடவும்  வேகமானது. இதன் தரை நிலையம்  மாத்தறையில் உள்ளது. மாத்தறையிலிருந்து கொழும்பில் உள்ள SLT டேட்டா செண்டரை மறுபடி நிலக்கீழ் கேபலில் அடைகிறது. இதன் இலங்கை உரிமையும்  SLT வசம் உள்ளது. இது வினாடிக்கு மொத்தம் 24 டெராபைட் டேட்டாவை கொண்டு செல்லும் திறன் கொண்டது

https://seamewe5.com/

Dhiraagu  திராகு - இந்தக் கேபல் அமைப்பு  சீ-மீ-வீ போன்று உலகம் முழுவதும் வியாபித்தில்லை. இது ஒரு (point-to-point) இடத்துக்கிட  இணைப்பு. இதன் மூலம் இலங்கையும் மாலத்தீவும் இணைகின்றன. இதன் இலங்கை உரிமையும்  SLT வசமே உள்ளது.

பாரத் லங்கா (Bharat Lanka) -  இதுவும் ஒரு  பாயிண்ட் டூ பாயிண்ட் கேபல் அமைப்பு.  இது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிறது. 320 Km நீளமுள்ள இந்தக் கேபல் இலங்கையை கல்கிசையிலும் இந்தியக் கரையை தமிழ் நாட்டிலுள்ள  தூத்துக்குடி (Tuticorin) நகரிலும் அடைகிறது. இதன்  இலங்கை உரிமையை  SLT யும் இந்தியாவின் உரிமையை Bharat Sanchar Nigam Limited (BSNL) நிறுவனமும் வைத்திருக்கிறது.  

Bay of Bengal Gateway (BBG) வங்காள விரிகுடா நுழைவாயில் - இது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சிங்கப்பூருக்கு செல்கிறது. இலங்கையில் இதன்  உரிமையை டயலோக் நிறுவனம் வைத்திருக்கிறது.  அதிகபட்ச வேகம் 6.4 Tbps என்று கூறப்படுகிறது. இதன்  தரைக் கட்டுப்பாட்டு நிலையமும் கல்கிசையில் யில் உள்ளது.

ஃபைபர் ஆப்டில் கேபல் மூலம் ஒளி வடிவில் டேட்டா எவ்வாறு கடத்தப்படுகிறது?

ஒன்று மற்றும் பூஜ்ஜியத்தை மட்டுமே பயன்படுத்தி டேட்டாவை ஒளி வடிவில் அனுப்ப முடியும்

இந்த வழியில் சிந்தியுங்கள். நீங்கள் ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் மறுகரையில் நிற்கிறார் . ஒன்று மற்றும் பூஜ்ஜியத்தை மட்டுமே பயன்படுத்தி அவருக்கு ஒரு செய்தியை (0111010) அனுப்ப விரும்புகிறீர்கள். நீங்கள் அதற்கு ஒரு டார்ச் லைட்டை பயன்படுத்துகிறீர்கள். டார்ச் லைட்டை ஆன் செய்தால் 1 என்றும் அணைத்தால் 0 என்றும் கருதுங்கள் / நண்பரும் அதைப் புரிந்து கொள்வார். நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மேலே தரப்பட்ட டிஜிட்டல் குறியிட்டுக்கேற்ப டார்ச் லைட்டை ஆன் / ஆஃப் செய்கிறீர்கள்.

ஆஃப் (0) ஆன் (1) ஆன் (1) ஆன் (1) ஆஃப் (0) ஆன் (1) ஆஃப் (0) செய்தி 0111010 மறுமுனையில் உள்ள நண்பருக்கு அனுப்பப்படும். இப்போது அவர் அந்த (பைனரி எண்ணை) குறியீட்டை ASCII குறியீட்டின்படி டிகோட் செய்து நீங்கள் அனுப்பியதை கண்டுபிடித்து விடுவார்.

உதாரணமாக 01001000 01101001 00100001 என்பது Hi! என்பதற்கான (பைனரி ) குறியீடு

இதே முறையிலேயே ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபல் மூலம் டேட்டா பரிமாற்றம் நிகழ்கிறது. ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபலினூடாக அதிக தீவிரம் கொண்ட லேசர் கற்றை அனுப்பப்படுகிறது. அது ஆன் மற்றும் ஆஃப் ஆகும்போது, ​​மறுபுறம் 1 அல்லது 0 ஐ நீங்கள் அடையாளம் காண்பீர்கள்.

கடல் வழி கேபல்கள் பாதுகாப்பானவையா?

கடலின் கீழ் இந்த கேபல்களை அமைப்பதற்கும் பராமரிப்பதற் குமென வேறு சர்வதேச நிறுவனஙகள் வாடகைக்கு அமர்த்தப்படு கின்றன. அந்த நிறுவனங்கள் கேபல் இடும் பணிக்குத் தேவையான கப்பல்களையும் சுழியோடிகளையும் வைத்திருக்கும். சுழியோடி களே வழக்கமாகக் கடலுக்கு அடியில் சென்று கேபலில் திருத்தங்கள் செய்வார்கள்.

கடலின்  கீழ் இடும் கேபல்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் எனக் கூற முடியாது. இந்தக் கேபல்கள் கப்பல்களின் நங்கூரங்களில் சிக்கி அறுந்து விடுவதும் உண்டு. கடற்கரைக்கு அண்மையிலேயே இவ்வாறன  சேதங்கள் அதிகம் நிகழும். அப்போது பராமரிப்பு நிறுவனங்களின் உதவி கோரப்படும்.

இவ்வாறான ஒரு சம்பவம் 2004 ஆம் ஆண்டு இலங்கையிலும் நிகழ்ந்து. தடை செய்யப்பட்ட பகுதியில் ஓர் இந்திய கப்பல் நங்கூரமிட்டதன் காரணமாக SEA-ME-WE 3  கேபல் அமைப்பு சேதமடைந்தது. பின்னர் சில தினங்களுக்குள் அது சரி செய்யப்பட்டது.

எனினும் இதன் காரணமாக இணைய வசதியோ சர்வதேச தொலைத் தொடர்பு சேவைகளோ இலங்கையில் முற்றாக அற்றுப் போகவில்லை. முன்னரே இருந்த SEA-ME-WE 2 கேபிள் இணைப்பு மற்றும் செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்தி சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

சில வேலைகளில் கடல் வாழ் உயிரினங்களாலும் கேபலுக்கு சேதம் விளையும். ஆனால் அவ்வாறன சம்பவங்கள் மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளன.

லேசர் ஒளிக் கற்றை (laser beam) நீண்ட தூரம் பயணிக்குமா?

இரவு  நேரத்தில் நாம் ஒரு டார்ச் விளக்கை ஆன் செய்யும் போது  அந்த விளக்கின் ஒளி அதிகபட்சமாக ஓரளவு  தூரம் செல்லும்.  தொலைவில் உள்ள ஒருவர் அதன் ஒளியைப் பார்க்க முடியாது.  ஃபைபர் ஆப்டிக் கேபலினூடு செல்லும் லேசர் ஒளிக் கற்றைகளுக்கும் இது பொருந்தும்.  

லேசர் ஒளியும்  செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் உள்ளது. எனினும் அந்த அதிக பட்ச தூரத்துடன் தரவு கடத்தப்படும் செயற்பாடு முடிவடைவடைதில்லை. அங்குதான் ரிப்பீட்டர்கள் (repeater) துணைக்கு வருகின்றன. லேசர் ஒளி கற்றையின் வேகம் பலவீனமடையும் இடங்களில் இடைக்கிடையே இந்த ரிப்பீட்டர்கள்    பொருத்தப்படுகின்றன. இவற்றின்  பணி கேபலின்  வலிமையை அதிகரிப்பதாகும்

பலவீனமான லேசர் கற்றை ரிப்பீட்டர்கள்  வழியாக அடுத்த நிறுத்தத்திற்கு திருப்பி அனுப்பி விடும். ரிப்பீட்டரில் உள்ள ஆப்டிக்கல் பெருக்கிகள் (optical amplifiers)  அதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

சாதாரண ஃபைபர் கேபல் மலிவாகக் கிடைத்தாலும் கடல் வழியே செல்லும் ஃபைபர் கேபல்கள் விலையுயர்ந்தவை.  காரணம் கேபலின் பதுகாப்பிற்காக அதனைச்  சுற்றி வர  இடப்படும் உலோகக் கவசமாகும் (metal shield). இந்தக் கேபலின் குறுக்குவெட்டைப் பார்க்கும்போது  ​​மெல்லிய நார் எவ்வளவு பாதுகாப்பாகக் கவசமிடப்பட்டிருக்கிறது  எனத் தெரிந்து கொள்ளலாம். இந்த உலோக கவசம் மூலமாகத்தான் ரிப்பீட்டர்களுக்குத் தேவையான மின் சக்தியும் வழங்கப்படுகிறது.

எனவே பல கடல் வழி கேபல்கள் மூலம் இலங்கை இணையத்துடன் தொடர்பு கொள்வதால் கேபல்களில் ஒன்று சேதமடைந்தாலும் இன்னும் மாற்று  கேபிள்களில் இலங்கை இனைந்திருப்பதனால் இலங்கைக்கான  இணைய சேவை ஒரு போதும்  தடைப்பட வாய்ப்பில்லை.