What is Chrome OS?
குரோம் ஓ.எஸ் - Chrome OS என்பது கூகுல் நிறுவனம் வடிவமைத்த லினக்ஸ் கர்னல் (Linux - Kernal) அடிப்படையிலான ஓர் இயக்க முறைமை. குரோம் ஓ.எஸ் ஜூன் 15, 2011 திகதியன்று கூகுலினால் வெளியிடப்பட்டது. இது குரோமியம் எனும் மற்றுமொரு திறந்த மூல நிரல் (ஓபன் சோர்ஸ்) ஓ.எஸ்ஸிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. குரோம் ஓ.எஸ் கூகுல் குரோம் இணைய உலாவியை அதன் முதன்மை பயனர் இடைமுகமாகப் பயன்படுத்துகிறது. மேலும் கூகுலின் வேறு பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது.
குரோம் ஓ.எஸ், குரோம் புக் - Chromebook எனும் மடிக்கணினிகளுக்காகவே வடிவமைக்கப் கப்பட்டுள்ளது. குரோம் புக் என்பது கூகுல் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு மவிவு விலை மடிக்கணினி. குரோம் புக்கில் விண்டோஸ், மேக்-ஓ.எஸ் என்பவற்றிற்குப் பதிலாக, கூகுலின் குரோம் ஓ.எஸ், இயங்கு தளமே நிறுவப்பட்டுள்ளது. குரோம்புக் மடிக் கணினிகளும் இணையம் சார்ந்த பயன்பாடுகளை முதன்மையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே Chrome OS ஐப் பயன்படுத்த உங்களுக்கு விரைவான இணைய இணைப்பு மிக மிக அவசியம்.
மேலும் Chrome OS ஐப் பயன்படுத்த உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும். இது Gmail, Maps, Docs மற்றும் Drive போன்ற அனைத்து Google சேவைகளுக்கும் அணுகலை வழங்குகிறது. குரோம் வெப்ஸ்டோரில் ஏராளமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான தெரிவும் உள்ளது.
.அண்ட்ராய்டு ஃபோன்களைப் போலவே, குரோம் ஓ.எஸ்ஸிற்கும் கூகுல் ப்ளே ஸ்டோருக்கான அணுகல் உள்ளது. அதாவது உங்கள் அண்ட்ராய்டு ஃபோனில் பதிவிறக்கம் செய்து இயக்கக்கூடிய பெரும்பாலான செயலிகளைக் குரோம் ஓ.எஸ்ஸிலும் பயன்படுத்தலாம்
குரோம் ஓ.எஸ்ஸில் கூகுல் டாக்ஸ், கூகுல் ஷீட்ஸ், கூகுல் ஸ்லைடு போன்ற பயன்பாடுகள் மூலம் உங்கள் அன்றாட அலுவலகப் பணிகளை நீங்கள் எளிதாகச் செய்யலாம். உங்கள் ஆவணங்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்கிற்குப் பதிலாகக் (cloud) கிளவுடிலேயே (கூகுல் ட்ரைவில்) சேமிக்கப்படும்.
நீங்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் போன்ற ஆன்லைன் பணிகளுக்குக மாத்திரம் கணினியைப் பயன்படுத்துவதானால், குரோம் ஓ.எஸ் ஒரு சிறந்த தெரிவு. எனினும் ஃபோட்டோஷாப் போன்ற விண்டோஸ் மற்றும் மேக்-ஓ.எஸ்ஸில் நீங்கள் டவுன்லோட் செய்து நிறுவக்கூடிய அப்லிகேசன்களை குரோம் ஓ.எஸ் ஆதரிக்காது. இதனால் குரோம் ஓ.எஸ் மற்றும் குரோம் புக் மடிக் கணினிகள் அனைவருக்கும் ஏற்றதில்லை.
இருந்தாலும் வெப் ஸ்டோரில் இதற்கு மாற்று வழிகள் உள்ளன. மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்செல் போன்றவற்றைப் பயன் படுத்த அவற்றின் கிளவுட் பதிப்பான ஆஃபிஸ் 365 பதிப்பைப் பணம் செலுத்தி பிரவுசரிலேயே பயன் படுத்த முடியும்.
இதன் பாதுகாப்பை பற்றிப் பேசுவோமானால் Chrome OS இல் செயற்பாடுகள் அனைத்தும் ஆன்லைனில் இருப்பதால் வைரஸ் பாதிப்பு சிறிதளவு தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. ஆனால் அனைத்து ஆன்லைன் அச்சுறுத்தல்களிலிருந்தும் 100 சத வீதம் பாதுகாக்கப்படுகிறீர்கள் எனக் கூற முடியாது. இருந்தாலும் குரோம் ஓ.எஸ் பிற இயக்க முறைமைகளைவிடக் கூகுலினால் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது.
குரோம் ஓ.எஸ்ஸை குரோம்புக் மடிக் கணினிகளிகிற்கென வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வழமையான உங்கள் டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகளிலும் நிறுவிப் பயன் படுத்த முடியும். ஆனால் அதற்குச் சிக்கலான ஒரு வழி முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது.
குரோம் ஒ.எஸ்ஸின் மூல வடிவமான குரோமியம் ஓ.எஸ்ஸை மாற்றியமைத்து கிலவுட்ரெடி (CloudReady) எனும் ஓர் ஓ.எஸ் Neverware எனும் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் இலவச பதிப்பை CloudReady for Home: Free Download — Neverware மிக இலகுவாக ஒரு பென் ட்ரைவ் மூலம் இயக்கி குரோம் ஓ.எஸ் அனுபவத்தைப் பெற முடியும்.