How to create a one-man Group on WhatsApp?
How to create a one-man Group on Whatsapp? வாட்சப்பில் தனி ஒருவன் குரூப் உருவாக்குவது எப்படி? உங்களை மாத்திரம் ஒரே அங்கத்தவராக் கொண்ட ஒரு வாட்சப் குழுவை நீங்கள் உருவாக்க முடியும். ஆனால் நேரடியாக உருவாக்க முடியாது. ஏனெனில் குரூப் எனும் போது அங்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இருக்க வேண்டும்..
சரி, இந்த தனி ஒருவன் குரூப்பை உருவாக்குவதில் என்ன பயன்?
மின்னஞ்சல்களை நீங்களே உங்களுக்கு அனுப்பிக் கொள்ள முடியும். என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் வாட்சப்பில் நீங்களே உங்களுக்குச் செய்திகளை அனுப்ப முடியாது. அதற்கு இவ்வாறு ஒரு தனி நபர் குரூப்பை உருவாக்கியே வாட்சப்பில் செய்திகளை நீங்களே உங்களுக்கு அனுப்பிக் கொள்ள முடியும்.
ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தியை அல்லது ஒரு இணைப்பை அனுப்பியிருக்கலாம். அதை இந்த தனி ஒருவன் குரூப்பிற்கு ஃபார்வர்ட் செய்து வைத்தால் அது எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். பின்னர் ஒரு நேரத்தில் வேறு நண்பர்களோடு விரும்பினால் பகிர முடியும்.
முக்கியமான குறிப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்கள் போன்றவற்றை இந்த தனி நபர் குரூப்பில் சேமித்து வைக்க முடியும்.
செய்திகளைத் மொபைலில் தட்டச்சு செய்யவும் இந்த குரூப்பைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு நீண்ட செய்தியை வாட்சப்பில் தட்டச்சு செய்யும் போது வழமையான குரூப்பில் உள்ளவர்கள் நீங்கள் ஏதோ டைப் செய்து அனுப்பத் தயாராக இருப்பதை அறிந்து கொள்ள முடியும். அதனை நீங்கள் விரும்பா விட்டால், உங்கள் தனி நபர் குழுவில் தட்டச்சு செய்து பின்னர் யாருக்கும் அனுப்பலாம்.
வழமையான வாட்சப் குரூப்பில் நீங்கள் பகிர விரும்பும் ஒரு நீண்ட செய்தியைத் தனி நபர் குழுவிற்கு முதலில் அனுப்பி அந்தச் செய்தி சீராக ஃபார்மட்டிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்னரே சரி பார்த்துக் கொள்ள முடியும்.
மேற்சொன்ன பயன்களுடன் நான் இதனை மொபைலிலிருந்து கம்பியூட்டருக்கும் கம்பியூட்டரிலிருந்து மொபைலுக்கும் டெக்ஸ்ட், டாகியுமென்ட்ஸ், படங்கள், வீடியோ போன்ற ஃபைல் பரிமாற்றம் செய்ய அதிகம் பயன் படுத்துகிறேன். அதற்குக் கம்பியூட்டரில் வாட்சப் வெப் அல்லது வாட்சப் டெஸ்க்டாப் செயலி பயன் படுத்த வேண்டும்.
தனி நபர் குழுவை உருவாக்குவது எப்படி
வாட்சப் பயனர்கள் ஏதோ ஒரு குரூப்பில் இருந்தாலும் எல்லோருமே வாட்சப்பில் குரூப் உருவாக்கி நடாத்துவதிலை என்பதால் அது எப்படி என்பதையும் சொல்லி வைக்கிறேன்.
தனி நபர் குழுவை உருவாக்க, வாட்சப்பைத் திறந்து மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளில் அல்லது கீழேயுள்ள message ஐக்கானைத் தட்ட வேண்டும்.
அடுத்த கட்டத்தில் New group என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்து குரூப்பில் சேர்க்க உங்கள் தொடர்புப் பட்டியலிலிருந்து ஒரு நபரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். (வாட்சப் ஒரு நபருடன் ஒரு குழுவை உருவாக்காது என்பதால் இங்கு ஒரு நபரைச் சேர்ப்பது அவசியம்). அடுத்து உங்கள் குழுவிற்கு நீங்கள் பெயரிட வேண்டும் விரும்பினால் குழுவிற்கான ஒரு படத்தையும் சேர்க்க முடியும்.
நீங்கள் நண்பரை குழுவில் சேர்க்கும்போது அந்த நண்பருக்கும் அறிவித்தல் செல்லும். அதனால் குருப்பில் சேர்க்கும் அந்த நபர் உங்களுக்கு மிக நெருக்கமான நண்பராக இருப்பது நல்லது.
இப்போது உங்கள் நண்பருடன் இருவர் கொண்ட ஒரு குரூப்பை உருவாக்கி விட்டீர்கள். ஆனால் இந்தக் குரூப்பை நீங்கள் மட்டுமேயிருக்கும் குரூப்பாக மாற்ற வேண்டும்.
அதற்குக் குழுவில் இணைத்த நண்பரைக் குழுவிலிருந்து நீக்கிவிட வேண்டும். குழுவின் மேலுள்ள மூன்று புள்ளிகளில் தட்டி Group Info ஐத் தெரிவு செய்து நீக்கலாம்.
இப்போது, நீங்கள் மட்டுமே குழுவில் இருக்கும் ஒரே நபர். இனி நீங்கள் உங்களுக்கே பாதுகாப்பாக குறிப்புகள், செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்ப ஆரம்பிக்கலாம்.