eSIM என்றால் என்ன?

 

What is eSIM? தற்போது மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தும் சிம் (SIM-Subscriber Identification Module) அட்டைகள்பற்றி நான் புதிதாக விளக்கத் தேவையில்லை. இவை ஒரு சிறிய கார்டாகக் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் கார்டை உள்ளே செருகிப் பயன் பயன்படுத்தலாம் இல்லையெனின் தூக்கியெறியலாம்.

ஆனால் இப்போது தொழிநுட்பம் மாறி விட்டது. வழமையான சிம்மிற்குப் பதிலாக eSIM -இ-சிம் எனும் புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியிருக்கிறது.

இந்த இ- சிம் Embedded SIM (eSIM) என்பது தொலைபேசிக் கருவியின் உள்ளேயே உட்பொதிக்கப்பட்டிருக்கும். இது நிரல்படுத்தக்கூடிய (programmable) ஒரு chip-சிப் ஆகும். இந்தச் சிப் இணையத்தினூடாக வாடிக்கையாளரின் சிம் சுயவிவரத்துடன் (profile) நிரல் படுத்தக் கூடியதுடன் தொலைபேசி சாதனத்தில் சிம் கார்டைச் செருக வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்கிறது.

இ-சிம்களை அகற்ற முடியாது என்பதால் வெவ்வேறு செல்லுலார் வழங்குநர்களுடன் செயலாற்றும் வகையில் நிரல் படுத்த முடியும். அதாவது இ-சிம் குறித்த ஒரு மொபைல் ஆபரேட்டரிலும் சாராமல் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆபரேட்டரை மாற்றலாம். ஒரே நேரத்தில் பல செல்லுலார் வழங்குநர்களுடன் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

மின்னணு முறையில் நிரல்படுத்தக்கூடியது என்பதால் புதிய செல்லுலார் வழங்குநருக்குச் மாறும்போது நீங்கள் அந்நிறுவனத்திற்கு நேரடியாகச் செல்லவோ அல்லது அஞ்சலில் புதிய சிம் கார்டைப் பெறவோ தேவையில்லை.

உங்கள் புதிய eSIM எண் மற்றும் விவரங்களை நிறுவனம் QR code வடிவில் மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கும். அதனை உங்கள் மொபைல் கேமரா மூலம் ஸ்கேன் செய்து eSIM ஐ செயற்பட முடியும்

இந்த இ-சிம்களை மொபைலில் உட்பொதிக்க மிகச்சிறியளவிலான இடமே தேவைப்படுகிறது. வழமையான நெனோ சிம் அட்டைகளுக்குத் தேவைப்படும் இடத்தைவிட 1/3 பங்கிற்கும் குறைவாகவே தேவைப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்குச் சாதனத்தை மேலும் சிறியதாக மாற்றி வடிவமைக்கவும் முடியுமாகிறது.

தனிப்பட்ட மற்றும் வணிக அழைப்புகளைப் பிரிப்பது மற்றும் வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது உள்ளூர் செல்லுலார் கட்டண திட்டங்களைப் பயன்படுத்துவது என்பன இ-சிம் தரும் பொதுவான வசதிகளாகும்.

மேலும் உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், மற்றொரு நபர் உங்கள் சிம் கார்டைப் பயன்படுத்த முடியாதவாறு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் இது வழங்குகிறது.

இ-சிம்கள் பொதிந்த முதல் ஸ்மார்ட்போன்கள் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வந்தன. பல பிரபலமான மொபைல் ஃபோன் மாடல்களில் இப்போது இ-சிம் சில்லுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இ-சிம்கள் பயன் பாடு இன்னும் பரவலாக இல்லாததாலும் eSIM தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் மொபைல் வழங்குநர்களுடன் மட்டுமே இவை செயற்படுவதாலும், பல eSIM உள்ளடக்கப்பட்ட சாதனங்கள் வழமையான் ஒரு சிம்-SIMஅட்டைக்கான ஸ்லொட்டையும் கொண்டுள்ளன. இன்னும் சில வருடங்களில் வழமையான சிம் அட்டை மொபைலில் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இ-சிம்மை இப்போது எல்லா ஃபோன்களுமே ஆதரிக்கின்றன எனச் சொல்ல முடியாது. ஐ-ஃபோன், அண்ட்ராயிட் மற்றும் கூகுல் பிக்ஸலின் சில அண்மைக்கால வெளியீடுகளில் மாத்திரமே இ-சிம் வசதியுள்ளது. இ-சிம்மை ஆதரிக்கும் முழுமையான மொபைல் ஃபோன் பட்டியலை இங்கே காணலாம்.

இலங்கையில் மொபைல் சேவை நிறுவனங்களான டயலாக் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் இ-சிம்மை ஆதரிக்கின்றன

இப்போது இல்லாவிடாலும் இன்னும் சில ஆண்டுகளில், மொபைல் இணைப்பில் உலகளவில் பயன்படுத்தப்படும் பொதுவான வார்த்தையாக இ-சிம் eSIM இருக்கப் போகிறது. 

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();