What is Pegasus?
What is Pegasus? பெகாசஸ் என்பது அண்ட்ராய்டு மற்றும் iOS இயக்க முறைமைகளுக்காக இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு நிறுவனமான (NSO Group) என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஸ்பைவேர் மென்பொருள்.
இது ப்லேஸ்டோரிலோ ஆப்-ஸ்டோரிலோஒ போய் நிறுவிக் கொள்ளும் மென்பொருள் செயலி அல்ல.
அண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களிலில் தரவுகளை உளவு பார்க்கவும் பிரித்தெடுக்கவும் அவ்வியக்க முறைமைகளில் உரிமையாளருக்குத் தெரியாமலேயே ரகசியமாக நிறுவக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தொலைபேசி மூலம் ஒருவரை உளவு பார்க்கவும் தரவை மீட்டெடுக்கவும் உதவுகிறது பெகாசஸ்.
இதன் மூலம் பக்கத்து வீட்டுக்காரரை உளவு பார்க்க முடியுமா என்றால் முடியாது. காரணம் இது தனி நபர்களின் கைகளில் ஒரு போதும் கிடைக்காது.
பெகாசஸ் மென்பொருள் உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் குற்றங்களுக்கு எதிராக போராட உதவும் வகையில் அரசுகளுக்கு மாத்திரம் இத்தொழிநுட்பத்தை வழங்குவதாக என்எஸ்ஓ கூறுகிறது.
பெகாசஸ் பற்றிய சமீபத்திய செய்திகளின்படி, இது iOS 14.6 வரையிலான பதிப்புகளில் கூட எந்த சிக்கலுமின்றி தரவைப் பயன்படுத்த முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பெகாசஸ் பற்றிய செய்தி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்தது. ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தனக்கு வந்த சில குறுஞ்செய்திகளில் சந்தேகம் கொண்டு அதனை இணைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் காண்பித்தபோது தன்னை பெகாசஸ் எனும் ஸ்பை வேர் குறி வைப்பதை அறிந்து கொண்டார்.
பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு தொலைபேசியில் உள்ள தொடர்புகள்-contacts, அழைப்பு பதிவுகள்-call logs, உரைச் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய தேடல் -browsing history போன்ற அனைத்தையும் உளவு பார்ப்பதை அனுமதிப்பது மட்டுமல்லாமல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இருப்பிடத்தையும் கண்காணிக்க என்எஸ்ஓ குழுவுக்கு உதவுகிறது.
மேலும் தொலை அணுகல் மூலம் (remote access) மொபைல் தொலைபேசியின் மைக்ரோஃபோன் மற்றும் கேமராவையும் கூட இயக்குவதையும் கண்காணிப்பு சாதனமாக மாற்றுவதையும் இது சாத்தியமாக்குகிறது.
இந்த ஸ்பைவேர் ஒரு தொலைபேசியில் பல வழிகளில் நுழையும். இலக்கு வைக்கப்படும் நபர் அறியாமல் (கிளிக்) / டெப் (tap) செய்யும் இணைப்புகள், புகைப்படங்கள் (photos app) மூலமாகவும் ஐஃபோனில் உள்ள ஆப்பிள் மியூசிக் மற்றும் ஐமேசேஜ் (iMessage) செயலிகள் மூலமாகவும் இது ஊடுறுவும். சில வேளைகளில் இலக்கு வைப்பவரிடமிருந்து டெப் (tap) செய்தல் போன்ற எந்தச் செயற்பாடும் இல்லாமல் கூடப் பெகாசஸ் ஸ்பைவேர் தொலைபேசியில் நுழைந்து கொள்ளும். தவற விடும் அழைப்புகள் மூலமாகாவும் (missed call) இதனை நிறுவ முடியும் எனச் சொல்லப்படுகிறது. இது உள்ளே நுழைந்ததுமே தொலைபேசி ஹேக் (hack) செய்யப்பட்டுவிடுகிறது.
மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த பெகாசஸ் மென்பொருளினால் தினமும் நாம் பயன் படுத்தும் ஜிமெயில், வைபர், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்கைப் பயன்பாடுகளிலிருந்தும் தகவல்களை சேகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் தகவல்கள் மறை குறியாக்கம் செய்யப்பட்டாலும் இந்த ஸ்பைவேர் இலக்கு வைப்பவரின் தொலைபேசியிலேயே உட்கார்ந்திருப்பதால் அவற்றையும் உளவு பார்க்க முடியுமென சொல்லப்படுகிறது.
இந்த ஸ்பைவேர் மூலம் குறி வைக்கப்பட்ட ஒரு நபரின் தொலைபேசியிலிருந்து எந்த தகவலும் 60 நாட்களுக்கு என்.எஸ்.ஓ நிறுவனத்திற்குச் செல்லாமல் இருந்தால் அந்த நபரின் தொலைபேசியிலிருந்து தானாக அது அழிந்து விடுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்கவே பெகாசஸ் பயன் படுத்தப்படுவதாகச் சொன்னாலும் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் கூட இலக்கு வைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
கடந்த வருடம் அல் ஜசீரா தொலைக் காட்சி நிறுவனத்தின் முன்னணி செய்தியாளர்களும் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது செல்போனும், கொலை செய்யப்பட்டதன் பின்பு அவரது குடும்பத்தினரின் செல்போனும் கூட பெகாசஸ் மூலம் உளவறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் டெலிகிராமின் நிறுவனர் பவல் டுரோவும் Pavel Durov பெகாசஸ் ஸ்பைவேரினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தியாவிலும் சில எதிர்க் கட்சி அரசியல் பிரமுகர்கள் பெகாசஸ் மூலம் உளவறியப்பட்டுளளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
பெகாசஸஸின் வருகை தனியுரிமை (privacy) எனும் விடயத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.