Traditional Me reaches 1M subscribers within a year
Traditional Me reaches 1M subscribers within one year இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் நதீ-யின் නදී ‘டிரெடிஷனல் மீ’ (Traditional Me-பாரம்பரிய நான்) எனும் சமையல் வீடியோக்கள் அடங்கிய யூடியூப் சேனல் உலகம் முழுவதும் ஏராளம் பேரைக் கவர்ந்திருக்கிறது.
லிசிகி-Liziqi எனும் சீனத்துச் சேனலின் பாதிப்பில் உருவான சமையல் வீடியோக்கள் அடங்கிய சேனல்தான் டிரடிஷனல்-மீ என லிசிகியைப் பற்றி முன்னரே அறிந்தோரால் கூற முடியும். எனினும் இரண்டு சேனல்களிலும் ஒரே சாயல் தெரிந்தாலும் இரண்டும் உலகின் இரு வேறு பிரதேச மக்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதால் இரண்டும் தனித்துவமாகத் தெரிகின்றன.
இயற்கைக் காட்சிகளை மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கும் விதம், படத் தொகுப்பு (எடிட்டிங்) மற்றும் பின்னணி இசையுடன் ஆரவாரமில்லாத நதீ- නදී மற்றும் அவரது சகோதரரின் (இருப்பு) நடிப்பு சுமார் 20-25 நிமிடங்களுக்கு பார்ப்பவர்களை வேறு சேனல்களுக்குத் தாவ விடாது கட்டிப் போட்டு விடுகிறது ட்ரேடிசனல் மீ.
சிங்கள பெண்களின் கிராமத்து உடையுடன் தோன்றும் நதீ காலில் செருப்புக் கூட அணியாமல் கூடையை சுமந்து பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளிலும் தோட்டங்களிலும் காய்கறிகள், பழங்களைப் பறித்து சுத்தம் செய்து தேவையான போது அம்மியில் அரைத்து உரலில் இடித்து மண் பாத்திரங்களிலிட்டு விறகடுப்பில் சமைத்து பின்னர் மூவரும் பகிர்ந்து உண்ணும் காட்சிகள் தொழிநுட்ப வளர்சியால் இழந்து போன பழைய வாழ்க்கை முறையைக் காட்டுகிறது.
நதீ, அவரது தம்பி (மல்லி) , மற்றும் அவர்களது பாட்டி (ஆத்தம்மா) என மூன்று பேரே இந்த வீடியோக்களில் தோன்றினாலும் இவர்களைத் தவிர இதற்குப் பின்னணியில் வீடியோ தயாரிப்பில் கைதேர்ந்த ஒரு குழுவினர் இருப்பது தெரிகிறது.
இன்ட்ரோ (Intro video) இல்லை
அவுட்ரோ Outro இல்லை
Subscribe பண்ணும்படி தொல்லை தரவில்லை
மல்லி. மல்லி என்று அழைக்கும் ஓசை தவிர நீண்ட உரையாடல்கள் இல்லை
கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப் பட்ட இந்த சேனலில் இது வரை மொத்தம் 36 வீடியோக்கள் மாத்திரமே பதிவேற்றப்பட்டுள் ளன. இந்த 36 விடியோக்களும் ஒரெ வருடத்தில் பத்து லட்சம் (1 மில்லியன்) பேரை பின் தொடர வைத்திருப்பது சேனலின் அபார வெற்றியைக் காட்டுகிறது.
மேலும் இரண்டே மாதங்களில் பத்து வீடியோக்களுடன் ஒரு லட்சம் பேரையும் ஐந்து மாதங்களில் 21 வீடியோக்களுடன் 5 லட்சம் பேரையும் பின் தொடர வைத்திருக்கிறது. மேலும் இவர் அப்லோட் செய்திருக்கும் ஒவ்வொரு வீடியோவுக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் (views) கிடைத்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
டிரெடிஷனல் மீ ஆரம்பித்த அதே காலப் பகுதியில் அதே சாயலில் பூர்ணா (Poorna - The nature girl) எனும் பெயரிலும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. (இதுவும் டிரெடிஷனல் மீ குடும்பத்திருந்து உருவான சேனல் போன்றே தெரிகிறது.) டிரெடிஷனல் மீ அளவிற்கு சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைக்காவிட்டாலும் அந்த சேனலும் 4 இலட்சம் பேரை அண்மித்திருக்கிறது.